கோவை, தேனி, நீலகிரி, திண்டுக்கல் உள்ளிட்ட பகுதிகளில் அடுத்த 24 மணிநேரத்தில் கனமழை அல்லது மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக, வானிலை மையம் தெரிவித்துள்ளது.
மேலும், மீனவர்கள் வடக்கு, மத்திய வங்ககடல் மற்றும் அந்தமான் கடற்பகுதிகளில் அடுத்த இரண்டு நாட்களுக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டாம் எனவும் அறிவுறுத்தியுள்ளது. வடமேற்கு வங்ககடலில் நிலைகொண்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது, அதே இடத்தில் உள்ளதாகவும், இது, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும் என்றும் வானிலை மையம் கணித்துள்ளது.
இதனால் மேற்கு திசைக்காற்று மேலும் வலுப்பெறும் நிலையில் தேனி, நீலகிரி, கோவை, திண்டுக்கல், திருநெல்வேலி உள்ளிட்ட மலை சார்ந்த பகுதிகளில் கன மழை முதல் அதி கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கடந்த 24 மணிநேரத்தில் அதிகபட்சமாக கோவை மாவட்டம் வால்பாறையில் 17 சென்டி மீட்டர் மழை பதிவாகி உள்ளதாக தெரிவித்துள்ள சென்னை வானிலை மையம், சென்னை மற்றும் புறநகர் பகுதியில் லேசான மற்றும் மிதமான மழை பெய்யக்கூடும் என கூறியுள்ளது.