உள்ளாட்சித் தேர்தலை நடத்துவது தொடர்பாக, மாநில தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் மீது சென்னை உயர்நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது.
கடந்த ஆண்டு நவம்பருக்குள் உள்ளாட்சி தேர்தலை நடத்தி முடிக்குமாறு, மாநில தேர்தல் ஆணையத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. ஆனால், அதனை அமல்படுத்தாததை எதிர்த்து, மாநில தேர்தல் ஆணையம் மற்றும் தமிழக அரசுக்கு எதிராக திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் சத்தியநாராயணன் மற்றும் சுந்தர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. மாநில தேர்தல் ஆணையம் சார்பில் வாதிட்ட மூத்த வழக்கறிஞர் வைத்தியநாதன், ஆகஸ்ட் 31ஆம் தேதிக்குள் வார்டு மறுவரையறை முடிக்கப்பட்டு, தமிழக அரசின் ஒப்புதல் பெற்ற பின்னர் மூன்று மாதங்களில் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படும் என்றார்.
அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், ஆணையம் அறிக்கை அளித்த பின்னர், எத்தனை நாட்களில் அரசு ஒப்புதல் அளிக்கும் என கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த அரசுத் தரப்பு வழக்கறிஞர், தேர்தல் ஆணையம் அறிக்கை தாக்கல் செய்த பின்னரே, ஒப்புதலுக்கான காலக்கெடுவை நிர்ணயிக்க முடியும் என்றார்.
இதனை தொடர்ந்து, ஏற்கனவே போதுமான கால அவகாசம் வழங்கபட்டுள்ளதை சுட்டிக்காட்டிய நீதிபதிகள், 2019ஆம் ஆண்டில் கூட தேர்தலை நடத்தி முடிக்க மாட்டீர்கள் போல உள்ளது என அதிருப்தி தெரிவித்தனர். திமுக தரப்பு வாதங்களை கேட்பதற்காக, வழக்கு விசாரணை செவ்வாய்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது