புதன், 22 ஆகஸ்ட், 2018

நீட் தேர்வு : சில முக்கிய தகவல்களை வெளியிட்டுள்ள மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் August 22, 2018

Image

நீட் தேர்வு ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே நடத்தப்படும் என மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் அறிவித்துள்ளது. 

பொது மருத்துவம் மற்றும் பல் மருத்துவம் போன்ற மருத்துவ படிப்புகளுக்கு நடத்தப்படும் ‘நீட்’ தேர்வு, அடுத்த ஆண்டு முதல் ஒருமுறைக்கு பதிலாக 2 முறை நடத்தப்படும் என மத்திய அரசு அண்மையில் அறிவித்தது. 
பிப்ரவரி மற்றும் மே மாதங்களில் இந்த தேர்வு நடத்தப்படும் எனக்கூறிய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர்,  இந்த தேர்வுகள் முற்றிலும் ஆன்லைன் மூலம் நடத்தப்படும் எனவும் தெரிவித்திருந்தார். இந்நிலையில், நீட் தேர்வில் முந்தைய நடைமுறையே தொடரும் என்று மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் அறிவித்துள்ளது. 

இது குறித்து மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், இனி ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே நீட் தேர்வு நடத்தப்படும் எனவும், ஆன்லைனில் நீட் தேர்வு நடைபெறாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2019ம் ஆண்டுக்கான நீட் தேர்வு, மே 5ம் தேதி நடைபெறும் என்றும், JEE நுழைவுத்தேர்வு 2019ம் ஆண்டு ஜனவரி 6 முதல் 20 ஆம் தேதி வரை நடைபெறும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. மருத்துவப் படிப்பில் சேருவதற்கான நீட் தேர்வு முடிவுகள் 2019ம் ஆண்டு ஜூன் 5 ம் வெளியிடப்படும் என்றும் மனிதவள அமைச்சகம் தெரிவித்துள்ளது.