சனி, 18 ஆகஸ்ட், 2018

கேரளாவில் கனமழைக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 324 ஆக உயர்வு! August 17, 2018

Image

கேரளாவில் கனமழை தொடர்ந்து வரும் நிலையில் அம்மாநிலத்தில் மழைக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 324 ஆக உயர்ந்துள்ளதாக  முதலமைச்சர் பினராய் விஜயன் கூறியுள்ளார். 

கேரளாவில் கடந்த 10 நாட்களாக தென்மேற்கு பருவமழை இடைவிடாமல் பெய்து வருகிறது. இதன் காரணமாக பல இடங்களில் குடியிருப்பு பகுதிகளை வெள்ளநீர் சூழ்ந்துள்ளது. இடுக்கி, பாலக்காடு, கோழிக்கோடு மாவட்டத்தின் பல இடங்களில் மண்சரிவு ஏற்பட்டுள்ளதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக கொச்சி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் குடியிருப்புகள் வெள்ளநீரில் மூழ்கியுள்ளன. இதையடுத்து படகுகள் மூலம் பொதுமக்கள் மீட்கப்பட்டு, நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டு வருகின்றனர். 

இதனிடையே, கனமழைக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 324 ஆக உயர்ந்துள்ளதாக கேரள முதல்வர் பினராய் விஜயன் தெரிவித்துள்ளார். கடந்த நூறு ஆண்டுகளாக இல்லாத வகையில், தற்போது பெய்துள்ள கனமழையால், 80 அணைகள் திறக்கப்பட்டுள்ளதாகவும். இதில் 324 பேர் உயிரிழந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மாநிலத்தில் உள்ள ஆயிரத்து 500-க்கும் மேற்பட்ட முகாம்களில் 2 லட்சத்து 23 ஆயிரத்து 139 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் பினராய் விஜயன், தமது டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார். கொச்சிவிமான நிலையத்தை வெள்ளம் சூழ்ந்துள்ளதால், வரும் 26ம் தேதி வரை விமான சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. கொச்சிக்கு வரும் விமானங்கள் அனைத்தும், வேறு விமான நிலையங்களுக்கு மாற்றிவிடப்படுகின்றன.

வரும் சனிக்கிழமை வரை கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. கேரளாவில் கனமழையால் எட்டாயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள பயிர்கள், குடியிருப்புகள் சேதமடைந்துள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது.

கேரளாவில் கனமழை தொடர்ந்து வரும் நிலையில் அங்கு மொத்தம் உள்ள 14 மாவட்டங்களில் 13 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வெள்ளத்தில் சிக்கியுள்ள  மக்களை ஹெலிகாப்டர்கள் மூலம் ராணுவத்தினரும், கடலோர காவல்படையினர் மீட்டு வருகின்றனர். கேரளாவில் ஏற்கனவே தேசிய பேரிடர் மீட்பு படையைச் சேர்ந்த பல்வேறு குழுக்கள் மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வரும் நிலையில் மேலும் 35 குழுக்கள் கேரளா வர உள்ளதாகத் தகவல்கள் கூறுகின்றன. 

கேரளாவில் தொடரும் கனமழையால் அம்மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் ஏற்பட்ட நிலச்சரிவில் வீடுகள் இடிந்து விழும் காட்சிகள் வெளியாகியுள்ளன.

கனமழையால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள கேரளாவிற்கு பிரதமர் நரேந்திர மோடி இன்று செல்கிறார். இது தொடர்பாக டிவிட்டரில் தகவல் பதிவிட்டுள்ள அவர், எதிர்பாராத விதமாக கேரளாவில் ஏற்பட்டுள்ள கன மழை பாதிப்புகளைப் பார்வையிட உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். மழை பாதிப்பு தொடர்பாக முதலமைச்சர் பினராயி விஜயனுடன் தொலைபேசியில் ஆலோசனை நடத்தியதாகவும், அங்கு மேற்கொள்ளப்பட்டு வரும் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் குறித்து கேட்டறிந்ததாகவும் மோடி தெரிவித்துள்ளார்.