டெல்லியில் ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழக மாணவர் சங்கத்தின் முன்னாள் நிர்வாகி உமர் காலித்தை குறி வைத்து துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பசு காவலர்களால் நடத்தப்படும் தாக்குதல்களைக் கண்டித்தும், பெண்கள் பாதுகாப்பை வலியுறுத்தியும் டெல்லியில் நாடாளுமன்றம் அருகே உள்ள அரசியல் சாசன கிளப் முன்பு இன்று போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் கலந்துகொள்வதற்காக உமர்காலித் வந்தபோது அவரை கொல்வதற்காக மர்ம நபர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டார்.
இந்த சம்பவத்தில் உமர் காலித் அதிர்ஷ்டவசமாக காயமின்றி உயிர் தப்பினார். அந்த மர்ம நபரை பிடிக்க உமர் காலித் ஆதரவாளர்கள் துரத்தியபோது அவர் ஆயுதத்தை அங்கேயே போட்டுவிட்டு தப்பியோடினார். நாளை மறு தினம் சுதந்திர தினம் கொண்டாடப்படுவதை முன்னிட்டு டெல்லியில் உச்சக்கட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இந்நிலையில் நாடாளுமன்றம் அருகே துப்பாக்கிச் சூடு சம்பவம் நடைபெற்றிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கடந்த 2016ம் ஆண்டு டெல்லி ஜஹவர்லால் நேரு பல்கலைகழகத்தில் நடந்த நிகழ்ச்சியில் இந்தியாவிற்கு எதிராக கோஷமிட்டதாக அப்போதைய மாணவர் சங்கத் தலைவர் கண்ணையாகுமாருடன் கைது செய்யப்பட்டவர் உமர் காலித் என்பது குறிப்பிடத்தக்கது.