சனி, 25 ஆகஸ்ட், 2018

​எங்கள் மாநிலத்திற்கு உதவ ஐக்கிய அரபு அமீரகம் முன்வந்ததில் எந்த சந்தேகமும் இல்லை: கேரளா முதல்வர் August 25, 2018

Image

மழைவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தங்கள் மாநிலத்திற்கு உதவ ஐக்கிய அரபு அமீரகம் முன்வந்ததில் எந்த சந்தேகமும் இல்லை என கேரள முதலமைச்சர் பினராய் விஜயன் திட்டவட்டமாகக் கூறியுள்ளார். 

தென்மேற்கு பருவ மழை தீவிரமடைந்ததன் காரணமாக கடந்த ஜூலை மாத இறுதியில் இருந்து கேரள மாநிலம் முழுவதும் கடுமையான மழை பொழிவை சந்தித்து வந்தது. இதன் காரணமாக கேரளாவின் மொத்தமுள்ள 14 மாவட்டங்களில், 13ல் கடுமையான சேதத்தை சந்தித்தது. அம்மாநில மக்களில் இயல்பு வாழ்க்கை அடியோடு முடங்கியது.

இயற்கை சீற்றத்தின் கோரத்தாண்டவத்தால் பாதிக்கப்பட்ட கேரளாவில் 370க்கும் மேற்பட்டோர் பலியாகினர். அம்மாநில மக்களுக்கு பொதுமக்கள், சினிமா பிரபலங்கள், அரசியல்வாதிகள் என பல்வேறு தரப்பினரும் தங்களால் இயன்ற நிவாரண உதவியை அளித்து வந்தனர். பல்வேறு மாநில அரசுகளும் நிதியுதவி அளித்துள்ள நிலையில், மத்திய அரசு முதல்கட்டமாக 600 கோடி ரூபாயை கேரளாவிற்கு வழங்கியுள்ளது.

இந்நிலையில் கடந்த வாரம் செய்தியாளர்களை சந்தித்த கேரள முதல்வர் பினராயி விஜயன், ஐக்கிய அரபு அமீரக அரசு வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரளாவிற்கு 700 கோடி ரூபாயை வழங்குவதாக தெரிவித்துள்ளதாக கூறினார்.

மத்திய அரசு 600 கோடி ரூபாய் அறிவித்த நிலையில் முதல்வர் பினராயி விஜயனின் இந்த அறிவிப்பு, நாடு முழுவதும் பலத்த பேசுபொருளாக மாறியது.  இந்நிலையில் கேரளாவிற்கு உதவுவது தொடர்பாக எந்த ஒரு அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் வெளியிடவில்லை என இந்தியாவிற்கான ஐக்கிய அரபு அமீரக தூதர் தெரிவித்தார். 

இதனை மறுத்துள்ள கேரள முதல்வர் பினராய் விஜயன்,  தங்கள் மாநிலத்திற்கு உதவத் தயார் என ஐக்கிய அரபு அமீரகம் கூறியது உண்மைதான் என்றும் அதில் எந்தவித சந்தேகமும் இல்லை என்றும் தெரிவித்துள்ளார். பிரதமர் மோடியைத் தொடர்பு கொண்டு ஐக்கிய அரபு அமீரக இளவரசர் ஷேக் முகம்மது இதனைத் தெரிவித்ததாகவும் கேரள முதல்வர் பினராய் விஜயன் கூறியுள்ளார்.