திமுகவில் இருக்கும் கருணாநிதியின் முக்கிய விசுவாசிகள் தன் பக்கமே இருப்பதாக மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் மகன் அழகிரி கூறியுள்ள நிலையில் அழகிரியின் அரசியல் பயணம் குறித்த சிறப்புசெய்தி.
கருணாநிதி மறைந்து ஒரு வாரம் கூட ஆகாத நிலையில் அவருடைய நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய பின் பேசிய மு.க.அழகிரி திமுக குறித்து தனது ஆதங்கத்தை கருணாநிதியிடம் தெரிவிப்பதற்காக வந்ததாக கூறினார். திமுகவில் மீண்டும் சேர்க்கப்படலாம் என்ற கருதப்பட்ட நிலையில் ஸ்டாலினுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்திருக்கிறார் அழகிரி.
அழகிரிக்கு இது ஒன்றும் புதிதில்லை. ஏற்கனவே சில முறை திமுக தலைமையோடும் ஸ்டாலினோடும் முரண்பட்டிருக்கிறார். முரசொலியின் மதுரைப் பதிப்பை கவனிப்பதற்காக கருணாநிதியால் மதுரைக்கு அனுப்பி வைக்கப்பட்டார் அழகிரி. பின்னர் மதுரையிலேயே தங்கிவிட்ட அழகிரியின் ஆதிக்கம், திமுகவிலிருந்து வைகோ நீக்கப்பட்ட போது கட்சிக்குள் அதிகமானது. திமுகவின் முக்கியமான மாவட்டச் செயலாளர்கள் சிலர் வைகோ பக்கம் நின்றது அழகிரிக்கு சாதகமானதாக மாறியது.
1996ம் ஆண்டு திமுக ஆட்சிக்கு வந்த போது மதுரையில் தனது இல்லத்தில் கட்சிக்காரர்களைச் சந்தித்து, தென்மாவட்ட திமுகவில் தனக்கென ஆதரவாளர்களை உருவாக்கத் தொடங்கினார் அழகிரி. 1999ம் ஆண்டு கொலைவழக்கில் கைது செய்யப்பட்ட திமுக நிர்வாகி மிசா பாண்டியனுக்கு எதிராக கட்சி நடவடிக்கை எடுத்தது. இதனால் கருணாநிதிக்கும் அழகிரிக்கும் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டது. அது 2001ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் எதிரொலித்தது. அந்த தேர்தலில் ஸ்டாலின் முன்னிலைப்படுத்தப்பட்டதையும் அழகிரி விரும்பவில்லை. தென் மாவட்டங்களில் பெரும்பாலான தொகுதிகளில் திமுகவின் அதிகாரப்பூர்வ வேட்பாளர்களுக்கு எதிராக போட்டி வேட்பாளர்களை நிறுத்தினார் அழகிரி. அதனால் பிடிஆர் பழனிவேல்ராஜன் உள்ளிட்ட வேட்பாளர்கள் தோற்றுப் போனார்கள். கடைசியில் கருணாநிதியை கைது செய்ததன் மூலம் அந்தப் பிரச்சனையை மறைமுகமாகத் தீர்த்து வைத்தார் ஜெயலலிதா.
கருணாநிதி கைதை எதிர்த்து மதுரையில் ஆயிரக்கணக்கான ஆதரவாளர்களோடு மறியல் செய்து கைதானார் அழகிரி. அதே வழக்கில் கைதான ஸ்டாலினை மதுரை சிறையில் சந்தித்த அழகிரி, ஸ்டாலின் ஜாமீனில் வெளிவந்த போது திறந்த ஜீப்பில் அவரை ஊர்வலமாக அழைத்து வந்தார் அழகிரி.
அடுத்த வந்த 2006 சட்டமன்றத் தேர்தலில் திமுகவிற்காக தேர்தல் பணிகளில் ஈடுபட்டார் அழகிரி. 2006-11 ஆட்சிக்காலத்தில் தென்மாவட்டங்களில் நடந்த இடைத்தேர்தலில் திமுக வெற்றி பெற அழகிரி காரணமாக இருந்தார். 2009 நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு வென்ற அழகிரி மத்திய அமைச்சரானார்.
பின்னர் கட்சியில் ஆதிக்கம் செலுத்துவதில் ஸ்டாலின், அழகிரிக்கு போட்டி ஏற்பட்டது. கடந்த 2014ம் ஆண்டு திமுகவிலிருந்து அழகிரி நீக்கப்பட்டார். தற்போது கருணாநிதி காலமான நிலையில் மீண்டும் திமுகவில் சலசலப்பை ஏற்படுத்தும் வேலையை தொடங்கியிருக்கிறார்.
“நான் அதிகம் பக்குவமில்லாமல் வேகமான செயல்பாடு உடையவனாக இருந்த போது பிறந்தவர் அழகிரி. நான் வாழ்க்கையில் கொஞ்சம் பக்குவப்பட பின் பிறந்தவர் ஸ்டாலின்” தனது மகன்கள் இருவர் குறித்து மறைந்த திமுக தலைவர் கருணாநிதி கூறிய வார்த்தைகள் இவை. இதை பொருத்திப் பார்க்கும்படியான நடவடிக்கையில் அழகிரி ஈடுபடுவதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.