வெள்ளி, 24 ஆகஸ்ட், 2018

முக்கொம்பு மேலணையில் 110 மீட்டர் நீளத்திற்கு தற்காலிக தடுப்பு அமைக்கும் பணி தொடக்கம்! August 24, 2018

Image

முக்கொம்பு மேலணையில் 110 மீட்டர் நீளத்திற்கு தற்காலிக தடுப்பு அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. 

திருச்சி முக்கொம்பு கொள்ளிடம் மேலணையில் கடந்த புதன்கிழமை இரவு 9 மதகுகள் உடைந்தன. இதையடுத்து உடைந்த மதகுகளை பார்வையிட்ட பொதுப்பணித்துறை அதிகாரிகள், அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை மேற்கொண்டனர். 

மதகுகள் உடைந்த பகுதிகளில், முதற்கட்டமாக 110 மீட்டர் தொலைவுக்கு 3 நிலைகளில், தற்காலிக தடுப்புகள் அமைக்கப்பட உள்ளன. இதற்கான பணிகள் தொடங்கியுள்ள நிலையில், நவீன இயந்திரங்கள் வரவழைக்கப்பட்டுள்ளன. தண்ணீரில் மூழ்கியபடி பணிகளை மேற்கொள்வதற்காக திருச்சி மற்றும் சென்னையில் இருந்து புளோட்டிங் மெஷின்கள் கொண்டு வரப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

9 மதகுகள் உடைந்த நிலையில், பிற மதகுகளின் உறுதித்தன்மை குறித்தும் ஆய்வு செய்யப்பட்ட வருகிறது. புதிய கதவணைகள் அமைப்பது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டு அரசுக்கு அறிக்கை அனுப்பப்படும் என தெரிகிறது. இதற்கிடையே, மதகுகள் உடைந்ததால் பாதிப்புக்கு உள்ளான முக்கொம்பு மேலணையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று ஆய்வு மேற்கொள்கிறார். 

முக்கொம்பு மேலணை உடைந்து விழுந்ததை தொடர்ந்து, 410 கோடி ரூபாய் மதிப்பில் புதிய கதவணை அமைக்க பொதுப்பணித்துறை முடிவு செய்துள்ளது. இதன்படி கொள்ளிடத்தில் தற்போது உள்ளபடி புதிதாக 45 மதகுகளுடன் 325 கோடி ரூபாய் மதிப்பில் கதவணை கட்டப்பட உள்ளது. 

இது கொள்ளிடத்தின் தெற்கு பகுதியில் அமைக்கப்பட உள்ளது. இதே போல் வடக்கு பகுதியில் அய்யன்வாய்க்காலில் 10 மதகுகள் கொண்ட புதிய கதவணை 85 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட உள்ளது. இப்பணிகளுக்கு அரசு ஒப்புதல் அளித்தால் 18 மாதங்களுக்குள் கதவணைகளை அமைத்து, பயன்பாட்டுக்கு கொண்டு வர முடிவு செய்யப்பட்டுள்ளது.