திமுக தலைவர் பதவிக்கு மு.க.ஸ்டாலினைத் தவிர வேறு யாரும் வேட்பு மனு தாக்கல் செய்யாததையடுத்து அவர் தலைவராவது உறுதியாகியுள்ளது. 28ம் தேதி நடைபெறும் திமுக பொதுக்குழுவில் இதற்கான அறிவிப்பு முறைப்படி வெளியாக உள்ளது.
திமுகவின் தலைவர் பதவியில் சுமார் 50 ஆண்டுகாலம் வரை நீடித்து வந்த கருணாநிதி கடந்த 7ம்தேதி உடல் நலக்குறைவால் காலமானார். இதையடுத்து கட்சியின் புதிய தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் அறிவிக்கப்பட்டது. வேட்பு மனுதாக்கல் செய்ய கடைசி நாளான இன்று மு.க.ஸ்டாலின் தலைவர் பதவிக்கு போட்டியிடுவதற்காக வேட்பு மனுக்கள் தாக்கல் செய்தார்.
இதே போல் பொருளாளர் பதவிக்கு திமுகவின் அமைப்புச் செயலாளர்களில் ஒருவரும் எம்.எல்.ஏவுமான துரைமுருகன் வேட்பு மனு தாக்கல் செய்தார். வேட்பு மனு தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் இன்று மாலை 4 மணியுடன் நிறைவடைந்தது. ஆனால் மு.க.ஸ்டாலின், துரைமுருகனைத் தவிர வேறு யாரும் வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யவில்லை. இதையடுத்து தலைவர் பதவிக்கு மு.க.ஸ்டாலினும், பொருளாளர் பதவிக்கும் துரைமுருகனும் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்படுவது உறுதியாகியுள்ளது.
வரும் 28ந்தேதி நடைபெற உள்ள திமுக பொதுக்குழுவில் மு.க.ஸ்டாலின் கட்சியின் தலைவராக மு.க.ஸ்டாலின் அறிவிக்கப்படுகிறார். திமுக 40 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி வரும் மு.க.ஸ்டாலின் இளைஞரணிச் செயலாளர், பொருளாளர் எனப் படிபடியாக முன்னேறி கட்சியின் தலைவராக முன்னேறியுள்ளார்.
திமுக தொடங்கியபோது தலைவர் பதவி ஏற்படுத்தாத நிலையில் அண்ணாவின் மறைவுக்கு பின்னர் அப்பதவி உருவாக்கப்பட்டு திமுகவின் முதல் தலைவராக கருணாநிதி தேர்ந்தெடுக்கப்பட்டார். சுமார் 50 ஆண்டுகளாக கட்சித் தலைவராக நீடித்து வந்த நிலையில் அவரது மறைவுக்கு பின்னர் கட்சியின் 2வது தலைவராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்க உள்ளார்.