புதன், 29 ஆகஸ்ட், 2018

திமுக தலைவராக இன்று பொறுப்பேற்கிறார் மு.க.ஸ்டாலின்! August 28, 2018

Image

திமுக தலைவராக மு.க.ஸ்டாலின் இன்று பொறுப்பேற்கிறார். இதற்கான அறிவிப்பு இன்று நடைபெறும் கட்சியின் பொதுக் குழுக் கூட்டத்தில் அறிவிக்கப்படுகிறது. 

திமுகவின் தலைவர் பதவியில் சுமார் 50 ஆண்டுகாலம் வரை நீடித்து வந்த கருணாநிதி கடந்த 7ம் தேதி உடல் நலக்குறைவால் காலமானார். இதையடுத்து கட்சியின் புதிய தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் அறிவிக்கப்பட்டது.  தலைவர் பதவிக்கு மு.க.ஸ்டாலின் வேட்பு மனு தாக்கல் செய்தார். அவரை அப்பதவிக்கு முன்மொழிந்து கட்சியிலுள்ள அனைத்து மாவட்டச் செயலாளர்களும் மனு தாக்கல் செய்தனர்.  இதே போல் பொருளாளர் பதவிக்கு திமுகவின் முதன்மை செயலாளரும், எம்.எல்.ஏவுமான துரைமுருகன் வேட்பு மனு தாக்கல் செய்தார். மு.க.ஸ்டாலினுக்கு போட்டியாக யாரும் வேட்பு மனுதாக்கல் செய்யவில்லை. 

இதையடுத்து அவர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்படுவது உறுதியானது. இதேபோல் பொருளாளர் பதவிக்கு துரைமுருகன் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்படுகிறார். இன்று காலை சென்னையில் திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் நடைபெறும் பொதுக்குழுக் கூட்டத்தில் திமுக தலைவராக மு.க.ஸ்டாலின் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கான அறிவிப்பை முறைப்படி வெளியிடுகிறார் கட்சியின் பொதுச் செயலாளரான அன்பழகன். 

திமுகவில் 50 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி வரும் மு.க.ஸ்டாலின், இளைஞரணிச் செயலாளர், பொருளாளர் எனப் படிப்படியாக முன்னேறி கட்சியின் தலைவராகவுள்ளார். திமுக தொடங்கியபோது தலைவர் பதவி ஏற்படுத்தாத நிலையில் அண்ணாவின் மறைவுக்கு பின்னர் அப்பதவி உருவாக்கப்பட்டு திமுகவின் முதல் தலைவராக கருணாநிதி தேர்ந்தெடுக்கப்பட்டார். சுமார் 50 ஆண்டுகளாக அவர் கட்சித் தலைவராக நீடித்து வந்த நிலையில் கருணாநிதி மறைவுக்கு பின்னர் கட்சியின் 2வது தலைவராக மு.க.ஸ்டாலின் இன்று பொறுப்பேற்க உள்ளார்.