சனி, 25 ஆகஸ்ட், 2018

​5 ஆண்டுகளில் ஆஸ்திரேலியாவிற்கு கிடைத்துள்ள 5வது பிரதமர்! August 24, 2018

Image

கடந்த 1975ம் ஆண்டு முதல் 2010ஆம் ஆண்டு வரை ஆஸ்திரேலியா 5 பிரதமர்களை கொண்டிருந்தது, இருப்பினும் கடந்த 5 ஆண்டுகளில் ஆஸ்திரேலியா 5வது பிரதமரை தேர்ந்தெடுத்துள்ளது.

ஆஸ்திரேலியாவின் ஆளும் லிபரல் கட்சியில் பிரதமராக இருந்த மால்கம் டர்ன்புல்லுக்கு ஏற்பட்ட எதிர்ப்பையடுத்து அந்நாட்டின் புதிய பிரதமராக ஸ்காட் மோரிஸ் தேர்வாகியுள்ளார். மால்கம் டர்ன்புல் தாராளவாத கொள்கைகளை கொண்டிருந்தார். அரசியல் ரீதியாக அவர் எடுத்த நிலைப்பாடுகள் அவரது கட்சிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியது, இதன் காரணமாக மால்கம் பிரதமர் பொறுப்பில் இருந்து விலகக் கோரி முன்னாள் உள்துறை அமைச்சரும், முன்னாள் காவல்துறை அதிகாரியும், வலதுசாரி சிந்தனையாளருமான பீட்டர் டத்தன் காய்களை நகர்த்தி வந்தார். 

இதன் காரணமாக நம்பிக்கை கோரும் ஓட்டெடுப்பு நடத்தப்பட்டது. ஆளும் லிபரல் கட்சியைச் சேர்ந்த எம்.பிக்கள் ஓட்டெடுப்பில் பங்கேற்றனர். இதில் எதிர்தரப்பான பீட்டர் டத்தன் மற்றும் மால்கம் டர்ன்புல் ஆதரவு பெற்ற தொழிலதிபரான ஸ்காட் மோரிஸ் ஆகியோர் பங்கேற்றனர்.

மால்கம் டர்ன்புல்லை பதவியில் இருந்து நீக்க போராடிய பீட்டர் டத்தனின் முயற்சி பலனளிக்காமல் போனது, ஆளும் தரப்பைச் சேர்ந்த பெரும்பாலானவர்களின் ஆதரவு ஸ்காட் மோரிஸுக்கே கிடைத்தது. எனவே அவர் ஆஸ்திரேலியாவின் புதிய பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். விரைவில் அவர் பதவியேற்க உள்ளார்.

என்றாலும் முன்னாள் பிரதமரான மால்கம் டர்ன்புல் தனது பதவியை ராஜினாமா செய்ய இருப்பதாக தெரிவித்துள்ளார். இதன் மூலம் ஆளும் தரப்பு ஒரு சீட் மெஜாரிட்டி கொண்டிருந்த நிலையில் தற்போது அந்த மெஜாரிட்டியை இழக்க நேரிடும் என்பது குறிப்பிடத்தக்கது.

புதிய பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஸ்காட் மோரிஸும் ஒரு வலதுசாரி சிந்தனையாளர் ஆவார் என்பது குறிப்பிடத்தக்கது.