தமிழகத்தில் 69 சதவீத இட ஒதுக்கீட்டு முறைக்கு எதிராக, சென்னையை சேர்ந்த இரண்டு மாணவிகள் தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
சென்னையைச் சேர்ந்த மாணவிகள் சஞ்சனா, அகிலா அன்னபூரணி ஆகியோர் உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தனர். அந்த மனுவில் தமிழகத்தில் கல்வி, வேலைவாய்ப்பில் 69 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் தமிழக அரசின் சட்டத்தை அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிரானதாக அறிவிக்க வேண்டும் என்று கோரியிருந்தனர். மேலும், 69 சதவீத இட ஒதுக்கீட்டு முறையால் மருத்துவ படிப்பில் சேர இடம் கிடைக்கவில்லை எனவும் தெரிவித்திருந்தனர். இதை அவசர வழக்காக, விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக உச்ச நீதிமன்றம் கூறியது.
இந்நிலையில், மனுமீதான விசாரணை இன்று நடைபெற்றது. மனுவை விசாரித்த நீதிபதிகள் அருண் மிஸ்ரா, இந்திரா பானர்ஜி அமர்வு, இட ஒதுக்கீட்டு முறையை எதிர்த்து மாணவிகள் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். மேலும், இட ஒதுக்கீட்டிற்கு எதிரான பிரதான வழக்கு வரும் நவம்பர் மாதம் விசாரிக்கப்படவுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.