ஞாயிறு, 19 ஆகஸ்ட், 2018

கேரளாவின் பேரழிவு வரலாற்றை திருத்தி எழுதும் 2018! August 19, 2018

Image

கேரள வரலாற்றின் கருப்புப் பக்கங்களை கடந்த பத்து நாட்களாக எழுதிக்கொண்டிருக்கிறது பெருமழை. கடவுள்களின் தேசம் என்று அழைக்கப்படும் கேரளாவை பெருமழை வெள்ளம் தலைகீழாக புரட்டிப்போட்டுக்கொண்டிருக்கிறது. கேரள வரலாற்றில் கிட்டத்தட்ட நூறு ஆண்டுகளுக்குப் பிறகு மோசமான பேரழிவை கேரளா சந்தித்திருக்கிறது. 

கடந்த 1924ம் ஆண்டில் இதே போல பெருமழை வெள்ளத்தால் பேரழிவை சந்தித்த வரலாறு கேரளாவுக்கு உண்டு. அந்த ஆண்டின் ஜூலை மாதத்தில் 3வாரங்கள் தொடர்ந்து விடாமல் பெய்த மழையில் இடுக்கி, திருச்சூர், எர்ணாகுளம், கோட்டயம், ஆலப்புழா ஆகிய ஐந்து மாவட்டங்கள் பலத்த சேதத்தை சந்தித்தது. அதிகாரப்பூர்வ கணக்கு எல்லையெனினும், ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தாக கூறப்படுகிறது. அந்த ஆண்டில் அதிக மழையை சந்தித்ததும் பேரழிவை சந்தித்ததும் இடுக்கி மாவட்டம் தான். இதில் அதிக பாதிப்பை சந்தித்தது மூணாறு பகுதி. மூணாறில் அந்த மாதத்தில் மட்டும் கிட்டத்தட்ட 4400 மில்லிமீட்டர் பெய்த பெருமழை, பல பகுதிகளின் புவியியல் வரைபடங்களை மாற்றியிருந்தது. அப்போது ஏற்பட்ட பெருமழை வெள்ளத்தில் கரிந்திரி மலை(Karinthiri Malai) என்ற ஒரு மலையே காணாமல் போனதோடு, குந்தல வேலி ரெயில்வே (Kundala Valley Railway)வழித்தடத்தையும் முற்றிலும் உருக்குலைத்தது. அந்த அழிவுக்குப் பிறகு இப்போது வரை இடுக்கி பகுதிக்கு இரயில் வழித்தடமே அமைக்கப்படவில்லை. இந்த மோசமான அழிவு கேரள வரலாற்றில் the flood of 1099 என்று குறிப்பிடப்படுகிறது. நமக்கு திருவள்ளுவர் ஆண்டு 2049 என்பது போல, 1099 கேரள மாநிலத்தின் ஆண்டு. அதன் படி தான் அந்த பெயர் வைக்கப்பட்டது.

1924 பேரழிவு நிகழ்ந்து நூறு ஆண்டுகளை நெருங்கும் வேளையில், மீண்டும் மழை வெள்ளத்தால் உருக்குலைந்து கொண்டிருக்கிறது கேரளா. ஜூன் 1ம் தேதி முதல் ஆகஸ்டு 15 வரை வழக்கமாக பெய்யும் மழையை விட 30 சதவீதம் அதிகம் பெய்திருக்கிறது கேரளாவில். குறிப்பாக ஆகஸ்டு 9 முதல் ஆகஸ்டு 15 வரையிலான காலகட்டத்தில் வழக்கமாக பெய்யும் மழையை விட 257 சதவீதம் அதிகம் கொட்டித்தீர்த்திருக்கிறது மழை. வழக்கமாக இந்த கால கட்டத்தில் 98மில்லி மீட்டர் மழையையே சந்திக்கும், ஆனால் இந்த ஆண்டில் கேரளா சந்தித்திருப்பது 352 மில்லி மீட்டர் மழைப்பொழிவை. இதுதான் மொத்த மாநிலமும் தண்ணீரில் மிதக்க காரணமாகிவிட்டது.

1924ஐப்போலவே இந்த பெருமழையிலும் நிலைகுலைந்து போயிருப்பது இடுக்கி மாவட்டம்தான். இடுக்கி மாவட்டத்தின் சராசரி மழைப்பொழிவு 126.3 ஆக இருக்க, இந்த ஆண்டு 679 மில்லி மீட்டர் மழைப்பொழிவை பதிவு செய்திருக்கிறது. இது சராசரி மழைப்பொழிவை விட 447.6 சதவீதம் அதிகம். இதுதான் கடந்த 26 ஆண்டுகளுக்குப் பிறகு மிக அதிக கொள்ளளவைக்கொண்ட இடுக்கி அணை திறக்க காரணமாகியிருக்கிறது. சுதந்திர தினமான ஆகஸ்டு 15ல் இடுக்கியில் பெய்த 274 மில்லிமீட்டர் மழைப்பொழிவு நிலமையை மேலும் மோசமாக்கியிருக்கிறது. வரலாற்றில் எப்போதும் இல்லாத அளவிற்கு கிட்டத்தட்ட கேரளாவின் அனைத்து அணைகளும் திறக்கப்பட்டிருக்கின்றன. பெருமழை வெள்ளம் மற்றும் அணையில் இருந்து திறக்கப்பட்ட நீரால் ஏற்பட்ட வெள்ளம் கேரளாவின் 14 மாவட்டங்களில் 13ல் பலத்த சேதத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இடுக்கி என்ற மாவட்டம் இருக்கிறதா இல்லையா என்பது மழை முற்றிலும் விட்ட பின்புதான் சொல்லமுடியும் என்ற நிலை.

இந்த மழை வெள்ளத்தால் 134க்கும் மேற்பட்ட பாலங்கள் தரைமட்டமாகியிருக்கின்றன. 200க்கும் மேற்பட்ட நிலச்சரிவுகளால் பாதைகள் முடக்கப்பட்டு போக்குவரத்து துண்டிக்கப்பட்டிருக்கிறது. அதோடு 26,000க்கும் மேற்பட்ட வீடுகள் பலத்த சேதமடைந்திருக்கின்றன. ஒரு லட்சம் கிலோ மீட்டருக்கும் அதிகமான சாலைகள் அழிந்திருக்கிறது. கேரளாவின் வரலாற்றில் எப்போதும் இல்லாத அளவிற்கு 80 அணைகள் திறக்கப்பட்டிருக்கின்றன. ஆகஸ்டு 18ம் தேதி அரசின் அதிகாரப்பூர்வ அறிவிப்பின் படி 357 பேர் இந்த வெள்ளத்தில் தங்கள் உயிரை இழந்திருக்கிறார்கள். இந்த எண்ணிக்கை மேலும் கூட வாய்ப்புகள் இருக்கிறது. 3 லட்சம் பேருக்கும் மேல் தங்கள் வாழ்விடங்களை இழந்து 3000க்கும் மேற்பட்ட நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டிருக்கின்றனர். 40,000 ஹெக்டேர் பயிர்கள் மூழ்கியிருக்கின்றன. ஒட்டுமொத்தமாக கிட்டத்தட்ட 21 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் இழப்பு என்று மதிப்பீடு செய்யப்பட்டிருக்கிறது. கடந்த ஜூனில் ஆரம்பித்த மழையின் தாண்டவம் இத்தனை நாட்கள் ஆகியும் இன்னும் விட்டபாடில்லை. 1924ம் ஆண்டு பெய்த 3,368 மில்லி மீட்டர் மழை அளவை ஒப்பிடும் போது 2018ம் ஆண்டின் ஜுன் முதல் ஆகஸ்டு வரையிலான 2,087.67 மி.மீ  மழைப்பொழிவு குறைவுதான். எனினும் தென்மேற்கு பருவமழை இன்னும் முடியவில்லை என்று தெரிவித்திருக்கிறது வானிலை மையம். இன்றும் கூட 11 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எனப்படும் அபாய எச்சரிக்கையை கொடுத்திருக்கிறது கேரள அரசு. 1924 வரலாற்றை திருத்தி எழுத மீதமுள்ள நாட்கள் காத்திருக்கிறது. இவ்வளவுக்குப் பின்னும் இந்த பேரழிவை தேசிய பேரிடராக அறிவிக்காமல் மத்திய அரசு மெளனம் காப்பதோடு, 600 கோடி ரூபாயை மட்டும் உடனடியாக நிவாரண நிதியாக வழங்கியிருக்கிறது. இந்த சூழ்நிலையில் தான்,  நாங்கள் நிற்கதியாய் நிற்கிறோம் எங்களுக்கு உதவுங்கள் என்று வெளிப்படையாகேவே கோரிக்கை வைத்திருக்கிறார் கேரள முதல்வர் பினராயி விஜயன்.

2015ம் ஆண்டு சென்னை பெருவெள்ளத்தை சந்தித்ததை அவ்வளவு சீக்கிரம் யாரும் மறந்துவிட முடியாது. சென்னை மக்கள் தங்கள் வாழ்வாதாரங்களை இழந்து தங்கள் சேமிப்பை இழந்து பலரது வாழ்க்கையையே புரட்டிப்போட்ட மழை அது. கேரளாவை ஒப்பிடும் போது சென்னையில் பெய்ததது குறைவான மழைதான். சென்னை அக்டோபரிலிருந்து டிசம்பர் வரை வழக்கமாக 790 மில்லி மீட்டர் மழைப்பொழிவை சந்திக்கும் ஆனால் 2015ம் ஆண்டில் 1600 மில்லிமீட்டர் மழையை சந்தித்தது. இது வழக்கமான மழை அளவை விட 102 சதவிதம் அதிகம். ஆனால் கேரளாவில், சென்னையில் பெய்ததை விட, கடலூரில் பெய்ததை விட இரண்டரை மடங்கு அதிகம். ஒரு மடங்கு அதிக மழைக்கே பெரும் இழப்பை சந்தித்தது சென்னை. அப்படியெனில் கேரளாவின் நிலைமை எப்படி இருக்கும் என்பதை யூகித்துக்கொள்ளுங்கள்.

சென்னை, கடலூருக்கு உதவ தமிழ்நாட்டின் ஏனைய மாவட்ட மக்கள் ஓடோடி வந்து சில வாரங்களுக்குள்ளாக இரு மாவட்டங்களையும் மீட்டு எடுத்தனர். ஆனால் கேரளாவின் நிலை அப்படியில்லை. மொத்த மாநிலமும் முடங்கியிருக்கிறது. அவர்களுக்குள்ளாகவே உதவிக்கொள்ளும் நிலையில் அம்மக்கள் இல்லை. மொத்த செல்வங்களையும் இந்த மழைக்கு பறிகொடுத்ததில், தங்கள் வாழ்க்கையை பூஜ்ஜியத்திலிருந்து தொடங்க வேண்டிய நிலை. ஏழை, பணக்காரன் என்று பாரபட்சம் பார்க்காமல் பலரை தெருவுக்கு கொண்டு வந்திருக்கிறது இந்த பெருமழை. முதல்வர், அமைச்சர்கள், எதிர்கட்சிகள் என மொத்த அரசியல், அதிகார அமைப்புகளும் களத்தில் போராடிக்கொண்டிருக்கின்றன. தேசிய பேரிடர் மீட்புப் படை, இந்திய ராணுவம், விமானப்படை என அத்தனையும் கேரளாவை வெள்ளத்தின் பிடியிலிருந்து மீட்க போராடிக்கொண்டிருக்கின்றன. வழக்கம் போல எல்லா பேரிடரிலும் அதிகம் பாதிக்கப்படும் மீனவ சமூகம், தங்கள் படகுகளை லாரிகளில் ஏற்றிக்கொண்டு மீட்புப் பணிகளுக்கு கிளம்பிவிட்டது. 

தமிழக அரசு 1 கோடி ரூபாய் மதிப்புள்ள மருத்துவப்பொருட்களை வழங்கியிருக்கிறது. அதோடு, 10 கோடி ரூபாயை நிவாரண நிதியாக கொடுத்திருப்பதோடு மட்டுமல்லாமல் கேரள மக்கள் குடிநீர் தேவைக்காக 2.8 லட்சம் லிட்டர் தண்ணீரை ரயிலில் அனுப்பி தன் பங்கிற்கு உதவியிருக்கிறது. அரசு மட்டுமல்லாது திரைத்துறையினர், அரசியல் கட்சிகள், பொதுமக்கள் என தங்கள் பங்கிற்கு நிவாரண நிதிகளை அளித்து வருகின்றனர். சென்னை பெருவெள்ளத்தின் போது கேரளா, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட பல மாநில அரசுகள் நமக்காக உதவிக்கரம் நீட்டியிருக்கின்றனர். அரசுகளை விட நம்மை தங்கள் உதவிகளால் அரவணைத்தது பலத்தரப்பட்ட மொழி, இனம், மதங்களைச் சேர்ந்த பொதுமக்கள் தான். கேரளாவோடு நீர்பங்கீடு உள்ளிட்ட விவகாரங்களில் தமிழகத்திற்கு நிறைய வருத்தங்கள், கருத்து வேறுபாடுகள் இருக்கிறது தான். ஆனால் இவற்றையெல்லாம் சிந்திக்க இது நேரமில்லை. கேரளாவிற்கும் சென்னைக்கும் இடைப்பட்ட தூரம் மிக அதிகம். ஆனால் சென்னை பெருவெள்ளத்தின் போது உணவுப்பொருட்கள், நிதியுதவிகள் உள்ளிட்ட நிவாரணங்களால் பல கிலோ மீட்டர்கள் தாண்டியும் கேரளாவின் கரங்கள் நம்மை அரவணைத்தது.

கேரள சுற்றுலாத்துறைக்கு பெருமளவு வருமானத்தை ஈட்டித்தருவதில் பெரும் பங்கு தமிழர்களுடையது. அதோடு சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்களின் எண்ணிக்கை தமிழகத்தில் கோடிகளைத் தொடும். மன அமைதிக்காக சுற்றுலா செல்ல வேண்டுமெனில் பெரும்பாலானோர் தேர்ந்தெடுக்கும் முதல் மாநிலமே கேரளாதான். புவியியல் அமைப்பு சார்ந்தும், மொழி அரசியல் போன்றவற்றோடு நமக்கு நெருங்கிய தொடர்புடைய மாநிலத்தைதான் இந்த மழை புரட்டிப்போட்டிருக்கிறது. 1924 வெள்ளம் எப்படி இடுக்கியின் புவியியல் அமைப்பை மாற்றியதோ, அதே அளவிற்கான பாதிப்பை இந்த பெருமழை ஏற்படுத்தியிருக்கும் என்பது நிச்சயம். சபரிமலை பக்தர்களோ அல்லது அடிக்கடி மூணாறு, வயநாடு என்று செல்பவர்களுக்கு பெருமழைக்கு முன்பு இருந்த புவியியல் அமைப்பை இனி பார்க்கப்போவது இல்லை. கேரளாவைச் சுற்றும் போது நாம் கடந்து சென்ற பல ஆற்றுப்பாலங்கள் தண்ணீரோடு போய்விட்டது. நாம் கொடுக்கும் நிதிஉதவி அந்த மக்களுக்கு மட்டுமானது மட்டும் இல்லை. அது நமக்குமானதும் தான். நம் மனதுக்கு நெருங்கிய தொடர்புடைய கேரளாவின் இயற்கைக்குமானதும் தான். கேரளாவின் பழைய நிலையை மீட்க, இயற்கை வளங்களை உயிர்ப்புடன் வைக்க அவர்களுக்கு நாம் கை கொடுக்க வேண்டியது அவசியம். அது நமது கடமையும் கூட.

கேரளாவின் இயற்கையை அனுபவித்த நாம், நம் கைமாறை திரும்பி செலுத்த வேண்டிய நேரம் இது. காஷ்மீரில் கண்ணீர் வந்தாலே தமிழ்நாட்டின் கரங்கள் நீளும், நம் அருகில் இருக்கும் சகோதரன் கண்ணீரை துடைக்க நம் கரங்கள் நீளாதா என்ன? உங்களால் இயன்ற நிதியுதவியை, அது எவ்வளவாகினும், https://donation.cmdrf.kerala.gov.in/ என்ற இணையதளம் வாயிலாக செலுத்துங்கள்.

நிவாரணங்களை பொருளாக கொடுக்க முன்வருபவர்களுக்கும், உதவிகள் தேவைப்படுபவர்களுக்கும் பாலமாய் இருக்கும் சேவையை செய்கிறது நியூஸ்7தமிழ் அன்பு பாலம். நிவாரணப்பொருட்களை வழங்க விரும்புவோர் நியூஸ்7தமிழ் “அன்பு பாலத்தை” +917708590477 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு உங்களுடைய உதவிகளை வழங்கலாம். உங்களது உதவியை சரியான இடத்தில் நியூஸ்7தமிழ் கொண்டு சேர்க்கும்.

காலத்தி னாற்செய்த நன்றி சிறிதெனினும்

ஞாலத்தின் மாணப் பெரிது.
இக்கட்டுரையின் கருத்துக்கள் கட்டுரையாளரையே சாரும், நியூஸ்7 தமிழ் இதற்கு பொறுப்பாகாது.