ஞாயிறு, 19 ஆகஸ்ட், 2018

வைகை ஆற்றின் கரையோர பகுதி மக்களுக்கு 2ஆம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை! August 19, 2018

Image

வைகை அணையின் நீர்மட்டம் 68.6 அடியாக உயர்ந்ததை அடுத்து, கரையோர மக்களுக்கு இரண்டாம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டது. 

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள வைகை அணை தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 தென் மாவட்டங்களின் குடிநீருக்கும், விவசாயத்திற்கும் ஆதாரமாக விளங்கி வருகிறது. 

71 அடி உயரம் கொண்ட வைகை அணையின் முக்கிய நீர்பிடிப்பு பகுதியான முல்லைப்பெரியாறு அணையிலிருந்து தமிழகத்திற்கு வினாடிக்கு 2,200 கனஅடி தண்ணீர் திறக்கப்படுகிறது. இது தவிர வருஷநாடு, மேகமலை பகுதிகளின் நீர்பிடிப்பு பகுதிகளில் மழை காரணமாக மூலவைகையாற்றில் தண்ணீர் வரத்தும் அதிகரித்துள்ளது.

இந்நிலையில் தொடர் நீர்வரத்தால், கடந்த 17ஆம் தேதி வைகை அணையின் நீர்மட்டம் 66.01 அடியை எட்டியது, இதன் காரணமாக கரையோர மக்களுக்கு முதல் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டது.

இதனிடையே வைகை அணையின் நீர்மட்டம் 68.6 அடியாக உயர்ந்ததை அடுத்து 5 மாவட்டத்தின் கரையோர மக்களுக்கு இரண்டாம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடபட்டுள்ளது. 

அணையின் நீர்மட்டம் 69 அடியாக உயர்ந்தவுடன் அணையின் பாதுகாப்பு கருதி 3ம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டு அணைக்கு வரும் தண்ணீர் அப்படியே வெளியேற்றபடும் என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

இன்னும் இரண்டொரு நாளில் வைகை அணை முழுகொள்ளளவை எட்டிவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது, ஆற்றின் கரையோர பகுதி மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.