ஸ்ரீவில்லிபுத்தூர் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில், மழை பெய்யாததால் அப்பகுதியில் வறட்சி நிலவுகிறது. இதனால், விவசாயிகள் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும், தென்மேற்கு பருவமழையால் நீர்நிலைகள் நிரம்பியுள்ள நிலையில், விருதுநகர் மாவட்டத்தில் பருவமழை பொய்த்ததால் ஆறுகள், ஏரிகள் உள்ளிட்டவை வறண்டு, குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டத்தின் முக்கிய அணையான கோயிலாறு அணை, வறண்டு காணப்படுவதால் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
ஸ்ரீவில்லிபுத்தூர் சுற்றுவட்டார கண்மாய்கள் தண்ணீரின்றி வறண்டு போயுள்ளதால், தென்னை மரம் பட்டு போய்விட்டதாகவும், நெற்பயிர் கருகிய நிலையில் உள்ளதாகவும் விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர். எனவே, அரசு தங்களுக்கு வறட்சி நிவாரணம் வழங்க வேண்டும், எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
விருதுநகர் மாவட்டத்தில் மழை சரிவர பெய்யாத காரணத்தால், ஸ்ரீவில்லிபுத்தூர் சுற்றுவட்டார பகுதிகளில் கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. மாதம் ஒரு முறை மட்டுமே குடிநீர் விநியோகிக்கப்படுவதாகவும், இதனால் தாங்கள் தினந்தோறும் குடிநீரை விலை கொடுத்து வாங்கு வேண்டிய அவல நிலை உள்ளதாக, பெண்கள் வேதனை தெரிவிக்கினறனர்.
வறட்சியை போக்க அரசு அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுப்பார்களா, என ஏக்கத்துடன் காத்திருக்கின்றன் ஸ்ரீவில்லிப்புத்தூர் பகுதி மக்கள்.