தமிழகத்தில் வெள்ளம் பாதித்த பகுதிகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை பார்வையிட உள்ளார்.
கர்நாடகாவில் பெய்து வரும் கனமழை காரணமாக காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால், 11 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் கனமழை பெய்து வருவதால், பெரும்பாலான அணைகள் முழு கொள்ளளவை எட்டியுள்ளன. நாமக்கல், ஈரோடு மாவட்டங்களில் வெள்ளம் பாதித்த பகுதிகளை முதலமைச்சர் பழனிசாமி நாளை ஆய்வு செய்யவுள்ளார். பவானி, குமாரபாளையம், கருங்கல் பாளையம், பள்ளிப்பாளையம் ஆகிய பகுதிகளில் ஆய்வு செய்யவுள்ள முதலமைச்சர், அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அப்போது, பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை அறிவிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
இதனிடையே, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள மாநிலத்திற்கு மேலும் 5 கோடி ரூபாய் தமிழக அரசு சார்பில் நிவாரண உதவி வழங்கப்படுவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். மேலும், அரிசி, பால் பவுடர் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களும் கேரளாவுக்கு வழங்கப்படும் என முதல்வர் தெரிவித்துள்ளார். ஏற்கனவே கேரள மாநிலத்திற்கு தமிழக அரசு 5 கோடி ரூபாய் நிவாரண உதவி வழங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதேபோல் தமிழக-கேரள எல்லையோர மாவட்டங்களில் இருந்து கேரள மாநிலத்துக்கு ஒரு கோடி மதிப்பிலான மருந்துகள் அனுப்புமாறு சுகாதார துறைக்கு அரசு அறிவுறுத்தியுள்ளது.