வெள்ளி, 17 ஆகஸ்ட், 2018

​காவிரி ஆற்றில் தண்ணீர் கரைபுரண்டு ஓடினாலும் வறண்ட பூமியாக காட்சியளிக்கும் கடைமடை பகுதி! August 17, 2018

Image

காவிரி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகின்ற போதிலும், டெல்டா மாவட்டங்களில், கடைமடைப் பகுதிகளுக்கு இன்னும் காவிரி நீர் சென்றடையாததது, விவசாயிகளை வேதனையில் ஆழ்த்தியுள்ளது.

கேரளா, கர்நாடகாவில் கொட்டித் தீர்த்த கனமழையால், காவிரி ஆற்றில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக வெள்ளம் கரைபுரண்டு ஓடிக் கொண்டிருக்கிறது. மேட்டூர் அணை இந்த ஆண்டு 2வது முறையாக நிரம்பி வழிகிறது. டெல்டா பாசனத்திற்காக, மேட்டூர் அணையை கடந்த ஜூலை 19ம் தேதி முதல்வர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார். காவிரியில் தண்ணீர் திறக்கப்பட்டு, கிட்டத்தட்ட ஒரு மாதம் முடிவடைய உள்ள நிலையில், டெல்டா மாவட்டங்களில் உள்ள கடைமடைப் பகுதிகளுக்கு தண்ணீர் வந்து சேரவில்லை என விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.

காவிரியில் பாயும் 2 லட்சம் கன அடிக்கும் அதிகமான தண்ணீர் வீணாக கடலில் கலப்பது ஒருபுறம் என்றால், அந்த நீரை ஏன் கடைமடைப் பகுதிக்கு தமிழக அரசு அனுப்ப மறுக்கிறது என்றும் விவசாயிகள் கேள்வி எழுப்புகின்றனர். மீத்தேன், ஷேல் எரிவாயு எடுக்கும் மத்திய அரசின் திட்டங்களுக்கு, இதன் மூலம் தமிழக அரசு மறைமுகமாக உதவுகிறதா? என்ற சந்தேகமும் தங்களுக்கு ஏற்படுவதாக விவசாயிகள் கூறுகின்றனர்.

காவிரியில் கரைபுரண்டு தண்ணீர் ஓடும் போதும், திருவாரூர், நாகை மாவட்டங்களில் உள்ள கடைமடை பகுதிகள் இப்போதும் வறண்ட பூமியாகவே காட்சியளிக்கின்றன. அங்குள்ள குளங்கள், ஏரிகள், நிரம்பாமல் வறண்டே காணப்படுகிறது. கடைமடை பகுதி விவசாயிகள் சம்பா சாகுபடி மேற்கொள்ள முடியாமல் வாய்க்காலில் எப்போது தண்ணீர் வரும் என்று காத்துக் கிடக்கின்றனர். கடைமடைப் பகுதிகளுக்கு தண்ணீர் வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்கத் தவறும் பட்சத்தில் விவசாயிகள் ஒன்றிணைந்து போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளதாக விவசாய சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.