முதலமைச்சர் பழனிசாமிக்கு எதிரான திமுகவின் ஊழல் புகார் குறித்து, பதில் அளிக்குமாறு தமிழக அரசுக்கு, சென்னை உயர்நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.
நெடுஞ்சாலை ஒப்பந்தப் பணிகளில் 4 ஆயிரத்து 800 கோடி ரூபாய் ஊழல் நடைபெற்றுள்ளதாகவும், இது தொடர்பாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீது, வழக்குப்பதிவு செய்யக் கோரியும், திமுக தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில், இவ்வாறு உத்தரவிடப்பட்டுள்ளது. 5 நெடுஞ்சாலை ஒப்பந்தப் பணிகளை, முதல்வர் பழனிசாமியின் சம்பந்தி பி.சுப்பிரமணியம், உறவினர் நாகராஜன், செய்யாத்துரை மற்றும் சேகர் ரெட்டி ஆகியோர் பங்குதாரர்களாக இருக்கும் நிறுவனங்களுக்கு, சட்டவிரோதமாக வழங்கி முறைகேடு நடைபெற்றதாக கூறி, எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக, லஞ்ச ஒழிப்புத்துறையில் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி புகார் அளித்தார்.
ஆனால், இந்த புகார் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால், முதல்வர் பழனிசாமி மீது வழக்குப்பதிவு செய்ய உத்தரவிடக் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆர்.எஸ்.பாரதி மனு தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதி ஜெகதீஷ் சந்திரா முன்னிலையில், இன்று விசாரனைக்கு வந்தது. இதில், திமுக மற்றும் அரசுத் தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி, 2 மாதங்களாக ஏன் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை? என கேள்வி எழுப்பினார். மேலும், நெடுஞ்சாலைத்துறை டெண்டர் முறைகேடு தொடர்பான புகாரில், எடுத்த நடவடிக்கைகள் குறித்து, லஞ்ச ஒழிப்புத்துறை பதிலளிக்கவும் உத்தரவிட்டார். இந்த வழக்கின் விசாரணை செப்டம்பர் 3-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.