இன்று கைதான மனித உரிமைச் செயல்பாட்டாளர்கள் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும் என கைதுக்கு வலியுறுத்துள்ளது.
இன்று டெல்லி, ஜார்கண்ட், மும்பை, மகாராஷ்டிரம், கோவா ஆகிய ஐந்து மாநிலங்களில் உள்ள முக்கிய மனித உரிமைச் செயல்பாட்டாளர்கள், எழுத்தாளர்கள் முதலானோர் வீடுகள் சோதனையிடப்பட்டு, சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள பேரா. அ.மார்க்ஸ் மற்றும் பேரா. பி. கோயா ஆகியோர், "வழக்குரைஞரும் பி/.யூ.சி.எல் அமைப்பின் தேசியத் தலைவருமான சுதா பரத்வாஜ், எழுத்தாளரும் மனித உரிமைப் போராளியுமான கௌதம் நவ்லக்கா ஆகிய இருவரும் போலீஸ் காவலில் உள்ளதாகவும் அறிகிறோம். தலித் அறிவுஜீவியும் எழுத்தாளருமான ஆனந்த் டெல்யும்டே, செயல்பாட்டாளர் சூசன் ஆப்ரஹாம், ஜார்கன்டில் பழங்குடி மக்கள் மத்தியில் வேலை செய்யும் திருச்சியைச் சேர்ந்த பாதிரியார் ஸ்டான் சாமி, ஆந்திரக் கவிஞர் வரவர ராவ், வழக்குரைஞர் அருண் ஃப்ரெய்ரா ஆகியோரது வீடுகள் சோதனை இடப்பட்டுள்ளது" என்று தெரிவித்துள்ளனர்.
மேலும், "சென்ற டிச 31 அன்று புனேயில் உள்ள பீமா கொரேகான் என்னுமிடத்தில் பேஷ்வா அரசுப் படைகளை தலித் படைவீரர்கள் வீழ்த்திய நினைவுச் சின்னத்தில் தலித்கள் மற்றும் பொதுமைச் சிந்தனை உடையவர்கள் கூடி 'எட்கார் பரிஷத்' எனும் நிகழ்ச்சியை நடத்தினர். அண்ணல் அம்பேத்கர் அஞ்சலி செய்த நினைவுச் சின்னம் அது. தலித் படை வெற்றிபெற்றதைக் கொண்டாடிய இந்த நிகழ்வில் ஆர்.எஸ்,எஸ் அமைப்பினர் புகுந்து குழப்பம் விளைவித்தனர். இந்த வெற்றிக் கொண்டாட்ட நிகழ்ச்சியை ஏற்பாடு செய்ததில் மாஓயிஸ்டுகளின் பங்கு இருந்ததாகச் சொல்லி இரண்டு மாதங்கள் முன் சுரேந்திரா காட்லிங், சுதிர் தவாலே, பேராசிரியை ஷோமாசென், மகேஷ் ராவ்த், ரோனா வில்சன் முதலான தலித் மற்றும் மனித உரிமைச் செயல்பாட்டாளர்களை மகாராஷ்டிர அரசு கைது செய்தது. அவர்கள் இன்று 'சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின்' (UAPA) கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இன்று வீடுகள் சோதனையிடப்பட்டவர்கள் அனைவரும் அந்தக் கைதுகளைக் கண்டித்தவர்கள்.
இப்படி மக்களுக்காகப் போராடுபவர்கள் மற்றும் எழுத்தாளர்கள், சிந்தனையாளர்கள், தலித் அறிவுஜீவிகள் ஆகியோர் மத்திய - மாநில பா.ஜ.க அரசுகளால் துன்புறுத்தப்படுவதை 'தேசிய மனித உரிமை அமைப்புகளின் கூட்டமைப்பு' வன்மையாகக் கண்டிக்கிறது. இன்று போலீஸ் காவலில் தடுத்து நிறுத்தப்பட்டுள்ள அனைவரும் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும்" என்று தெரிவித்துள்ளனர்.