சென்னை மாநகராட்சியில் லஞ்சம் கொடுக்காமல் சான்றிதழ் பெற முடியாத நிலைக்கு மக்கள் ஆளாகியுள்ளதாக உயர்நீதிமன்றம் வேதனை தெரிவித்துள்ளது.
ஷெனாய் நகரில், மாநகராட்சி நிலத்தை ஆக்கிரமித்து வைக்கப்பட்டுள்ள ஜெனரேட்டரை அகற்றக்கோரி, லட்சுமி என்பவர் வழக்கு தொடர்ந்தார். மனு மீதான விசாரணை நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் முன்பு நடைபெற்றது. அப்போது, மாநகராட்சி எல்லைக்குள் சட்டவிரோத கட்டுமானங்களை தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து மாநகராட்சி வழக்கறிஞர் பட்டியலிட்டார்.
மாநகராட்சியின் நடவடிக்கைக்கு அதிருப்தி தெரிவித்த நீதிபதி, சட்டவிரோத கட்டுமானங்களை தடுக்க நடவடிக்கை எடுக்காமல் இருப்பது மக்களை விரக்தி அடைய செய்துள்ளதாகவும், விதிகளை பின்பற்றி கட்டிட ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளதா என கேள்வி எழுப்பினார்.
ஊழல் நடவடிக்கையில் ஈடுபட்ட மாநகராட்சி அதிகாரிகள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்தும், சொத்து வரியை வசூலிப்பதாக உத்தரவாதம் அளித்தும் நடவடிக்கை எடுக்காத அதிகாரிகள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்தும் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை வரும் 27-ம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.