புதன், 15 ஆகஸ்ட், 2018

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம்: சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு August 14, 2018

Image

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பான அனைத்து வழக்குகளையும் சிபிஐ விசாரணைக்கு மாற்றி, சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. 

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூடக் கோரி கடந்த மே 22ம் தேதி பொதுமக்கள் ஆட்சியர் அலுவலகம் நோக்கி பேரணியாக சென்றனர். அப்போது நேரிட்ட வன்முறையில் போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். இதுகுறித்த வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரித்து வருகின்றனர். 

மேலும் இச்சம்பவம் தொடர்பாக 242 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டன. இதற்கிடையே, துப்பாக்கிச்சூடு குறித்து சிபிஐ விசாரணை நடத்தப்பட வேண்டும், துப்பாக்கிச்சூட்டுக்கு காரணமான அதிகாரிகள் மீது கொலை வழக்குப்பதிவு செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் அடங்கிய 15 பொதுநல வழக்குகளை உயர்நீதிமன்ற மதுரை கிளை விசாரித்து வந்தது. 

இதையடுத்து இந்த வழக்குகளை இன்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் செல்வம், பஷீர் அகம்மது ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது. வாதங்களை கேட்டறிந்த நீதிபதிகள், வன்முறை சம்பவம் தொடர்பாக தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட 6 பேர் மீதான வழக்குகளை ரத்து செய்து உத்தரவிட்டனர். 

காவல்துறை துப்பாக்கிச்சூடு நடத்த காரணம் என்ன என கேள்வி எழுப்பிய நீதிபதிகள், பொதுமக்களை குறிபார்த்து நெற்றியிலும், மார்பிலும் சுடுவதற்கான காரணம் குறித்தும் கேள்வி எழுப்பினர். விதிகளை மீறி துப்பாக்கிச்சூடு நடத்திய போலீசார் மீது, ஏன் இதுவரை ஒரு வழக்கு கூட பதிவு செய்யப்படவில்லை என்றும் கேள்வி எழுப்பினர். 

மேலும் வழக்குகள் அனைத்தையும் சிபிஐக்கு மாற்றி நீதிபதிகள் உத்தரவிட்டனர். நான்கு மாதங்களுக்குள் விசாரணையை முடிக்கவும் சிபிஐக்கு, நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர்.