திங்கள், 27 ஆகஸ்ட், 2018

புதுச்சேரி கடற்கரையில் உருவாக்கப்படும் செயற்கை மணற்பரப்பு திட்டம்! August 27, 2018

Image

புதுச்சேரி கடற்கரையில் உருவாக்கப்படும் செயற்கை மணற் பரப்பு திட்டம், மீனவர்கள் மற்றும் சுற்றுலா பயணிகளிடையே மிகுந்த வரவேற்பினை பெற்றுள்ளது. 

சுற்றுலா பயணிகளின் சொர்க்க பூமியாக திகழும் புதுச்சேரியின் அழகினை ரசிக்க, நாள்தோறும் ஏராளமானோர் வருகை தருகின்றனர். அவர்கள் புதுச்சேரி கடற்கரையின் அழகை ரசிக்க தவறுவதில்லை. கடந்த 20 ஆண்டுகளுக்கு முன் வரை, பல மீட்டர் தூரத்திற்கு அழகாக காட்சியளித்த மணற்பரப்பு, கொஞ்சம் கொஞ்சமாக மறைந்து போனது. 

கடல் அரிப்பால் மறைந்து போன மணற்பரப்பினை மீட்டெடுக்கும் முயற்சியாக, செயற்கையான மணற் பரப்பு உருவாக்கும் திட்டத்தை, புதுச்சேரி அரசு மத்திய அரசுடன் இணைந்து, 25 கோடி ரூபாய் செலவில் செயல்படுத்தி வருகிறது. இதன் ஒருபகுதியாக, புதுச்சேரி தலைமைச் செயலகம் எதிரில், கடற்கரையில் இருந்து, 120 மீட்டர் தூரத்தில், இரும்பிலான முக்கோண வடிவமுடைய ராட்சத மிதவையை, கடலினுள் இறக்கி உள்ளனர். இதனால் கடல் நீரோட்டத்தில் மணல் அடித்து செல்லாமல் தடுக்கப்பட்டு, 200 மீட்டர் தொலைவிற்கு, செயற்கையான மணற்பரப்பு உருவாக்கப்பட்டுள்ளது. இது படிப்படியாக உயர்ந்து, அடுத்த 2 வருடங்களில், 2 கிலோ மீட்டர் தொலைவிற்கு, செயற்கை மணற்பரப்பு உருவாக்கப்படும் என்று, இத்திட்டத்தின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

நியூசிலாந்திற்கு அடுத்து, இந்தியாவிலேயே முதல்முறையாக, இரும்பிலான முக்கோண வடிவ மிதவை, இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த மிதவை, 50 மீட்டர் நீளமும் , 60 மீட்டர் அகலமும் கொண்டது. இதன் எடை 900 டன் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ராட்சத மிதவையால் அலையின் வேகம் குறைந்து, 200 மீட்டர் தொலைவிற்கு மணற் பரப்பு உருவாகியுள்ளது.

மேலும், முகத்துவாரத்தில் தூர்வாரப்படும் மணல், இப்பகுதியில் கொட்டப்படும்போது, முழுமையான கடற்கரை மணற்பரப்பு உருவாகும். இத்திட்டம் கடல் அரிப்பை தடுக்கும் என்பதால், மீனவர்களுக்கும் உதவியாக இருக்கும். இந்த புதிய முயற்சிக்கு, சுற்றுச்சூழல் ஆர்வலர்களும், மணலில் விளையாடுவதில் ஆர்வம் காட்டும் சுற்றுலா பயணிகளும், மிகுந்த வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

இத்திட்டம், பொலிவிழந்த புதுச்சேரி கடற்கரையின் அழகை, மீட்டெடுக்கும் முயற்சிக்கு கிடைத்த வெற்றி, என்றே கூறலாம். இதனால் ஓரிரு ஆண்டுகளில், முழுமையான மணற்பரப்பினை, புதுச்சேரி கடற்கரை சாலையில் காணலாம்.