
தமிழகத்தின் மேற்குத்தொடர்ச்சி மலையோர மாவட்டங்களில் பெய்துவரும் கனமழையால் நீர்நிலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
தாமிரபரணி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் கன்னியாகுமரி மாவட்டத்தில் ஆற்றங்கரையோரம் உள்ள செங்கல் சூளைகளில் வெள்ளம் புகுந்ததால் சுமார் மூன்று கோடி செங்கல்கள் சேதமடைந்துள்ளது. இதனால் 18 கோடி ரூபாய் அளவிற்கு இழப்பீடு ஏற்பட்டுள்ளதாகவும், ஒரு லட்சம் தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளதாகவும் செங்கல் சூளை உரிமையாளர்கள் கூறுகின்றனர்.
கன்னியாகுமரி மாவட்டம் கோதையாற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் 9-ஆவது நாளாக திற்பரப்பு அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. சிற்றாறு அணையில் இருந்து வினாடிக்கு 2,000 கன அடி உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருவதால், கோதையாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே மந்தியூரில் உள்ள பிள்ளைகுளம் நிரம்பிய நிலையில் மறுகால் உடைந்து அருகிலுள்ள வயல்களில் தண்ணீர் புகுந்தது. ராமநதி அணையின் கீழ் பாசன வசதி பெறும் 33 குளங்களும் நிரம்பியுள்ளன. இந்நிலையில், தண்ணீர் நிரம்பி இருந்த மந்தியூர் பிள்ளைகுளம் மறுகால் உடைந்து வெளியேறிய நீரால் சுமார் 100 ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டிருந்த பயிர்கள் சேதமடைந்தன.
கோவை மாவட்டம் வால்பாறையில் கனமழையால் குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்த நிலையில், பொதுமக்கள் முகாம்களில் தஞ்சமடைந்துள்ளனர். அரசுப் பேருந்துகளையும் இயக்க முடியாத சூழல் நிலவுவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கியுள்ளது. முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளவர்களுக்கு அரசு அதிகாரிகள் நிவாரணப் பொருட்களை வழங்கிவருகின்றனர்.
தேனி மாவட்டம் கம்பம் அருகே தொடர் கனமழை காரணமாக சுருளி அருவியில் வெள்ளப்பெருக்கு நீடித்துவருகிறது. மேகமலை, இரவங்கலாறு உள்ளிட்ட வனப்பகுதிகளில் பெய்யும் கனமழையால் சுருளி அருவியில் கடந்த சில நாட்களாக வெள்ளப்பெருக்கு அதிகரித்துள்ளது. இதனால் அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு 6-ஆவது நாளாக தடை விதிக்கப்பட்டுள்ளது.