புதன், 22 ஆகஸ்ட், 2018

இயல்பு நிலைக்கு திரும்பும் கேரளம்! August 22, 2018



கேரளாவில் வெள்ளம் வடிந்த பகுதிகளில் மறுசீரமைப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. கேரளாவில் வரலாறு காணாத அளவுக்கு பெய்த அடைமழையால், அங்குள்ள 14 மாவட்டங்கள் வெள்ளக்காடாய் மாறின. நூற்றுக்கணக்கான வீடுகள் மண்ணுக்குள் புதைந்த நிலையில், ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட வீடுகள் பலத்த சேதமடைந்தன. 

4 லட்சத்திற்கும் மேலான மக்கள் வீடுகளை இழந்து தவித்து வருகின்றனர்.  மண்சரிவாலும், வெள்ளத்தாலும் 10 ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவுக்கு சாலைகள் உருக்குலைந்துள்ளன. பெரும்பலான பாலங்கள் இடிந்து விழும் அபாயக் கட்டத்தில் இருக்கும் நிலையில், மறுசீரமைப்பு பணிகள் தொடங்கியுள்ளன. திருச்சூர் உள்ளிட்ட பகுதிகளில் தற்போது வெள்ளம் வடித்த நிலையில், அங்கு மறுசீரமைப்பு பணிகளை எல்லைப் பாதுகாப்பு படையினர் மேற்கொண்டு வருகின்றனர். 

கோழிக்கோடு, பாலக்காடு உள்ளிட்ட பகுதிகளிலும் மறுசீரமைப்பு பணிகள் துரித கதியில் நடைபெற்று வருகின்றன. மேலும் ஜலரக்சா-2 என்ற பெயரில் முப்பதாயிரம் போலீஸார் இப்பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 

சுமார் 19 ஆயிரத்து 500 கோடி அளவுக்கு வெள்ள சேதம் ஏற்பட்டுள்ள நிலையில், மறு சீரமைப்புக்கு பணிகளை மேற்கொள்ள நபார்டு வங்கியிடம் ஐந்தாயிரம் கோடி கடன் பெற கேரள அரசு திட்டமிட்டுள்ளது. வெள்ள நிவாரண பணிகளுக்கு தேவைப்படும் நிதியை திரட்டுவதற்காக, ஜி.எஸ்.டி. மீது 10 சதவீத கூடுதல் வரி விதிக்கவும், மது மற்றும் லாட்டரி சீட்டு மூலம் நிதி திரட்டவும் கேரள அரசு முடிவு செய்துள்ளது.

மேலும் புயல் போன்ற இயற்கை பேரிடர்களை முன்கூட்டியே கண்டறிந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள திருவனந்தரபுரத்தில் புயல் எச்சரிக்கை மையத்தை ஓரிரு மாதங்களில் நிறுவவும் கேரள அரசு திட்டமிட்டுள்ளது. 

நிவாரண முகாம்களில் இருக்கும் பெரும்பாலானோர் மனரீதியாகவும், உடல் ரீதியாகவும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களின் மனஅழுத்தத்தைப் போக்கிடவும், உடல் உபாதைகளை சரி செய்யும் விதமாகவும் மருத்துவக் குழுக்கள் செயலாற்றி வருகின்றன. இதனிடையே வெள்ளம் வடியத் தொடங்கிய பகுதிகளில், இயல்பு நிலை திரும்பி வருகிறது.

நிவாரண முகாம்களை விட்டு குடும்பம் குடும்பமாக வெளியேறும் மக்கள், தங்களது குடியிருப்புகளுக்கு திரும்பி வருகின்றனர். எனினும், குடியிருப்பு பகுதிகளுக்குள் பாம்பு, தேள், முதலை போன்ற உயிரினங்கள் தஞ்சமடைந்துள்ளதால், அவற்றை அப்புறப்படுத்தும் கடினமான பணியை பொதுமக்கள் எதிர்நோக்கியுள்ளனர்.