தமிழகத்தில் மீண்டும் திமுக ஆட்சி மலர அனைவரும் ஒன்றுபட்டு உழைக்க வேண்டும் என, அக்கட்சியின் செயற்குழு கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் உருக்கத்துடன் வேண்டுகோள் விடுத்தார்.
மு.க.அழகிரி போர்க்கொடி தூக்கிய பரபரப்பான சூழலில், திமுகவின் அவசர செயற்குழு கூட்டம் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் திமுக தலைவர் கருணாநிதியின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து, கூட்டத்தில் பேசிய மு.க.ஸ்டாலின் கண்ணீர் மல்க உருக்கமாக உரையாற்றினார்.
அப்போது, கருணாநிதி இல்லாமல் திமுகவில் கூட்டம் நடப்பது வேதனை அளிக்கிறது என்றும், தமிழகத்தில் மீண்டும் திமுக ஆட்சி மலர அனைவரும் ஒன்றுபட்டு உழைக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.
மெரினாவில் கருணாநிதிக்கு இடம் ஒதுக்க வேண்டும் என முதல்வரின் கைகளைப் பிடித்து கெஞ்சியதாக குறிப்பிட்ட ஸ்டாலின், எனினும் இடம் கொடுக்க முதல்வர் மறுத்துவிட்டதாக கூறினார். மெரினாவில் கருணாநிதிக்கு இடம் கிடைக்காமல் போயிருந்தால் என்னையும் கருணாநிதிக்கு அருகே புதைக்க நேரிட்டிருக்கும் என்றும் ஸ்டாலின் உருக்கத்துடன் தெரிவித்தார்.
முன்னதாக பேசிய திமுக முதன்மை செயலாளர் துரைமுருகன், திமுகவின் தலைவராகி மு.க.ஸ்டாலின் தங்களை வழி நடத்த வேண்டும் என கேட்டுக் கொண்டார். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று பேச முடியாத நிலையிலும் தமக்கு அண்ணாவை பிடிக்கும் என கருணாநிதி கூறியதை, துரைமுருகன் நினைவு கூர்ந்தார். இதற்கிடையே செய்தியாளர்களை சந்தித்த திமுக எம்பி டிகேஎஸ் இளங்கோவன், பொதுக்குழு கூடி திமுகவின் புதிய தலைவரை தேர்வு செய்யும் என தெரிவித்தார்.