ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியில், பசுமை குடில் மூலம் காய்கறி சாகுபடியில், பொறியியல் பட்டதாரி தம்பதி அசத்தி வருகின்றனர்.
கடந்த 15 வருடங்களாக வெளிநாட்டில் வேலை பார்த்து வந்த பொறியியல் பட்டதாரி ராமகிருஷ்ணன், விவசாயத்தின் மீது கொண்ட ஆர்வத்தினால், தனது சொந்த ஊரில் பசுமைக்குடில் அமைத்து பயிரிட முடிவு செய்துள்ளார். இதற்கு அவருடைய மனைவி உமாமகேஸ்வரியும் முழு ஆதரவு தெரிவித்ததால், தங்களுடைய அரை ஏக்கர் நிலத்தில் பசுமை குடிலை அமைக்கும் நடவடிக்கையை மேற்கொண்டனர்.
வறட்சியின் பிடியில் சிக்கி தவிக்கும் விவசாயிகளுக்கு, பசுமை குடில் விவசாய முறையை ஊக்குவிக்கும் வகையில், தமிழக தோட்டக்கலைத்துறை சார்பில் 50 சதவீதம் மானியமும், சொட்டு நீர் பாசன கருவிகளுக்கு 75 சதவீத மானியமும் வழங்கப்பட்டு வருகிறது.
இதனை பயன்படுத்தி கொண்டு இவர்கள் பசுமை குடிலை அமைத்துள்ளனர். தற்போது வெள்ளரி சாகுபடியை வெற்றிகரமாக மேற்கொண்டு வரும் இவர்கள், ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதி விவசாயிகளுக்கு முன்னுதாரணமாக விளங்கி வருகின்றனர்.