இருசக்கர வாகனங்களின், பின் இருக்கையில் அமர்ந்து செல்பவர்களும் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என்ற விதிமுறைகள், கண்டிப்புடன் அமல்படுத்தப்படும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு உறுதியளித்துள்ளது.
மோட்டார் சட்ட விதிகளின்படி, இருசக்கர வாகனத்தின் பின் இருக்கையில் அமர்ந்து செல்பவர்களும் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என விதிமுறையை தமிழக அரசு அமல்படுத்தக் கோரி, சென்னை கொரட்டூரை சேர்ந்த ராஜேந்திரன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நீதிபதி மணிகுமார், நீதிபதி சுப்பிரமணியம் பிரசாத் அடங்கிய அமர்வு முன்பு, விசாரணைக்கு வந்தது.
அப்போது, கட்டாய ஹெல்மெட் சட்டத்தை அமல்படுத்தியது குறித்து காவல்துறை தரப்பில், கூடுதல் தலைமை வழக்கறிஞர் அறிக்கை தாக்கல் செய்தார். அதனை ஆய்வு செய்த நீதிபதிகள், ஹெல்மெட் அணியாத இருசக்கர வாகன ஓட்டிகள் மீது மட்டும் காவல்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், பின்னால் அமர்ந்து பயணிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் சுட்டிக்காட்டினர்.
இதனையடுத்து, இருசக்கர வாகனங்களின் பின் இருக்கையில் பயணிப்பவர்களும் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என்ற மோட்டார் வாகன சட்ட விதிகள் அமல்படுத்தப்படும் என காவல்துறை தரப்பில் உறுதி அளிக்கப்பட்டது. இது தொடர்பாக பத்திரிக்கை, தொலைக்காட்சிகள் மூலம் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது.
மேலும், ஹெல்மெட் அணியாமல் பின் இருக்கையில் பயணித்தவர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து தனி அறிக்கை தாக்கல் செய்வதாகவும் கூடுதல் தலைமை வழக்கறிஞர் தெரிவித்தார். இதையடுத்து, வழக்கு விசாரணை ஆகஸ்ட் 31ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.