டெல்லியில் உள்ள தலைமை தேர்தல் ஆணையத்தில் அனைத்துக் கட்சி கூட்டம் தொடங்கியது.
2019ம் ஆண்டு மக்களவை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், டெல்லியில் உள்ள தலைமை தேர்தல் ஆணையத்தில் இன்று அனைத்துக்கட்சி கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மத்தியப் பிரதேசம், சட்டீஸ்கர், ராஜஸ்தான், மிசோரம் ஆகிய மாநிலங்களில் இந்த ஆண்டு பிற்பகுதியிலும், மக்களவைக்கு அடுத்த ஆண்டும் தேர்தல் நடைபெற உள்ளது. இதுகுறித்து இன்றைய அனைத்துக்கட்சி கூட்டத்தில் ஆலோசிக்கப்பட உள்ளது.
இதற்காக தலைமை தேர்தல் ஆணையத்தில் நடைபெறும் கூட்டத்திற்கு, அங்கீகரிக்கப்பட்ட 7 தேசிய கட்சிகள், 51 மாநில கட்சிகளின் பிரதிநிதிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. வாக்குசீட்டு முறையை மீண்டும் கொண்டு வருவது குறித்தும், ஒரே நேரத்தில் நாடாளுமன்ற, சட்டமன்ற தேர்தல்களை நடத்துவது குறித்தும் ஆலோசிக்கப்படும் என தகவல் வெளியாகி உள்ளது. வேட்பாளர்களின் செலவு, வேட்பாளர்களின் விளம்பரம் தொடர்பாக பத்திரிகைகளுக்கு கட்டுப்பாடு, ஆன்லைன் பிரச்சாரம் குறித்து ஆலோசிக்கபடலாம் என தெரிகிறது