
நாட்டின் 72 வது சுதந்திரதினம் இன்று கொண்டாடப்படுகிறது.
அதனையொட்டி, டெல்லியிலுள்ள வரலாற்று சிறப்புமிக்க செங்கோட்டையில் பிரதமர் மோடி தேசிய கொடியை ஏற்றி வைத்து, நாட்டு மக்களுக்கு உரை நிகழ்த்தினார்.
சென்னை கோட்டைக் கொத்தளத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி காலை 9.15 மணிக்கு தேசிய கொடியை ஏற்றி வைத்து உரையாற்றுகிறார். முதல்வராகப் பொறுப்பேற்ற பிறகு, இரண்டாவது ஆண்டாக அவர் கொடியேற்றவுள்ளார். சுதந்திர தின கொண்டாட்டத்தை யொட்டி ஒத்திகை நிகழ்ச்சி சென்னை கடற்கரை சாலையில் 3 நாட்கள் நடைபெற்றது. இதில் கமாண்டோ படை, குதிரைப்படை, காவலர்கள், தேசிய மாணவர் படை, பள்ளி மாணவர், மாணவிகள் ஆகியோர் ஒத்திகையில் பங்கேற்றனர். இந்த ஒத்திகை நிகழ்ச்சியை யொட்டி கடற்கரை சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவின் 72வது சுதந்திர தினம் இன்று கொண்டாடப்படுவதை முன்னிட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. விழாவின் போது மிகப்பெரும் தாக்குதலை நடத்த பயங்கரவாத அமைப்புகள் திட்டமிட்டுள்ளதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ.யின் ஆதரவுடன் இந்த தாக்குதலை நடத்துவதற்காக பயங்கரவாதிகள் ஊடுருவி இருப்பதாக உளவுத்துறை தெரிவித்துள்ளது. பேருந்து, ரயில் மற்றும் விமான நிலையங்கள், அரசு அலுவலகங்கள், வழிபாட்டு தலங்கள் உள்ளிட்டவை பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளன.