மேட்டூர் அணையின் நீர்மட்டம் ஒரே ஆண்டில் மூன்றாவது முறையாக நிரம்பியுள்ளது.
கர்நாடகா மாநிலத்திலுள்ள கபினி, கே.ஆர்.எஸ். உள்ளிட்ட அணைகளிலிருந்து திறந்துவிடப்பட்ட அதிகப்படியான நீரால் மேட்டூர் அணையானது ஜூலை 23-ம் தேதி முதன்முறையாக நிரம்பியது. பின்னர் ஆகஸ்ட் 11-ம் தேதி இரண்டாவது முறையாக முழு கொள்ளளவை எட்டியது. கர்நாடக நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததை அடுத்து, மேட்டூர் அணைக்கான நீர்வரத்து 2 லட்சம் கனஅடியில் இருந்து 80 ஆயிரம் கனஅடியாக குறைந்தது.
அதன் எதிரொலியாக, மேட்டூர் அணையிலிருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவு 40 ஆயிரம் கனஅடியாக குறைக்கப்பட்டதால், நீர்மட்டமான 3வது முறையாக 120 அடியை எட்டியது. இன்று காலை நிலவரப்படி மேட்டூர் அணைக்கான நீர்வரத்து 75 ஆயிரம் கனஅடியாக குறைந்துள்ள நிலையில், டெல்டா பாசனத்திற்காக 75 ஆயிரம் கனஅடியும், கால்வாய் பாசனத்திற்கு 800 கனஅடி நீரும் வெளியேற்றப்பட்டு வருகிறது. கடந்த 2005-ம் ஆண்டு மேட்டூர் அணை ஒரே ஆண்டில் 5 முறை நிரம்பியது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே கர்நாடக நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்த காரணமாக அங்குள்ள கே.ஆர்.எஸ் அணையில் இருந்து உபரிநீரானது முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது. கே.ஆர்.எஸ். அணைக்கு வினாடிக்கு 28 ஆயிரத்து 779 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கும் நிலையில், நேற்று மாலை அது படிப்படியாக குறைந்தது. இதன் காரணமாக அணையிலிருந்து வெளியேற்றப்படும் நீரானது முற்றிலும் நிறுத்தப்பட்டது. எனினும் கபினி அணையிலிருந்து வினாடிக்கு இருபதாயிரம் கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.