
ஏடிஎம்களில் பணம் நிரப்புவது குறித்து புதிதாக அதிரடி அறிவிப்பை மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
வங்கி ஏடிஎம்களில் பணம் நிரப்பும் வாகனங்கள் மீது தாக்குதல் நடத்தி கொள்ளையடிக்கும் சம்பவங்கள் அண்மைக்காலங்களில் அதிகரித்து காணப்பட்டன, இது தவிர பணப் பெட்டகங்கள் தாக்குதலுக்கு உள்ளாவதும், ஏடிஎம் மோசடிகள் போன்றவையும் இரவு நேரங்களில் அதிகளவில் நடந்து வருகின்றன.
இவற்றை தடுக்கும் நோக்கில் புதிய அறிவிப்பு ஒன்றை உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. அதன்படி, ஏடிஎம்களில் பணம் நிரப்பும் நேரம் வரையறை செய்யப்பட்டுள்ளது.
கிராமப்பகுதிகளில் உள்ள ஏடிம்களில் மாலை 6 மணி வரையும், நகர்புறங்களில் இரவு 9 மணி வரையும், நக்சல் பாதிப்பு உள்ள பகுதிகளில் உள்ள ஏடிஎம்களில் மாலை 4 மணி வரை மட்டுமே பணம் நிரப்ப வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் பணம் நிரப்பும் வாகனங்களில் ஒரு ஓட்டுனர், இரண்டு ஆயுதம் தாங்கிய பாதுகாவலர்கள், இரண்டு ஏடிஎம் அதிகாரிகள் அல்லது சம்பந்தப்பட்டவர்கள் இருக்க வேண்டும் எனவும், ஒரு ஆயுதம் தாங்கிய பாதுகாவலர் ஓட்டுனர் இருக்கைக்கு அருகிலும், மற்றொருவர் பின் இருக்கையிலும் இருக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது. பணம் நிரப்பும் சமயத்திலோ, உணவு, சிற்றுண்டி அல்லது இயற்கை உபாயம் கழித்தல் ஆகிய நேரங்களில் ஒரு ஆயுதம் தாங்கிய பாதுகாவலராவது பணம் இருக்கும் வாகனத்துடன் இருக்க வேண்டியது கட்டாயம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
எந்த ஒரு ஏடிஎம் அதிகாரியும் காவல்துறையினர் வாயிலாக இருப்பிடம், ஆதார் மற்றும் முந்தைய பணியிடம் போன்றவற்றை சரிபார்த்த பின்னரே நியமிக்கப்பட வேண்டும் எனவும் அந்த சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதுமட்டுமல்லாமல் பணம் நிரப்பிய வாகனங்களில் குறைந்தபட்சம் 5 நாட்கள் சேமிப்பு வசதி கொண்ட வகையிலான சிசிடிவி கேமரா வசதி பொருத்தப்பட்டிருக்க வேண்டும் எனவும், கேபினின் உட்புறம் மற்றும் வெளிப்புறத்திலும் சிசிடிவி கேமரா பொருத்தியிருக்க வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.
இது தொடர்பாக பணம் நிரப்பும் தனியார் நிறுவனங்களுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. இந்த நடைமுறை 2019ம் ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் அமலுக்கு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.