வெள்ளி, 17 ஆகஸ்ட், 2018

​தென் மேற்குப் பருவமழை தீவிரமடைந்ததால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிப்பு! August 17, 2018

Image

தென் மேற்குப் பருவமழை தீவிரம் அடைந்துள்ளதால், பல்வேறு பகுதிகளில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

நொய்யாலாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதை அடுத்து, திருப்பூர் அனைப்பாலம் பகுதியில் உள்ள தரைப்பாலம் தண்ணீரில் மூழ்கியது. தென் மேற்குப் பருவ மழை காரணமாக கோவை, திருப்பூர், நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக கன மழை பெய்து வருகிறது. திருப்பூர் நொய்யலாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட நிலையில், அனைப்பாலம் பகுதியில் உள்ள தரைப்பாலம் மூழ்கியது.

இதனால் கல்லூரி சாலை - மங்களம் சாலை இடையே போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. வெள்ளப்பெருக்கு காரணமாக நொய்யலாற்றின் கரையோரங்களில் வசிக்கும் மக்களுக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் நேற்றே வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. 

கோவை மாவட்டம் வால்பாறையின் பல்வேறு பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்ததால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. வால்பாறை நகரில் உள்ள வாழைத்தோட்டம், காமராஜ் நகர், காந்தி நகர், எம்.ஜி.ஆர் நகர் உள்ளிட்ட பகுதிகளில் வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்துள்ளது.

வால்பாறை அரசு போக்குவரத்து பணிமணையும் வெள்ளத்தில் மூழ்கியதால் போக்குவரத்து பாதிப்படைந்துள்ளது. வெள்ளம் பாதித்த இடங்களை கோவை மாவட்ட வருவாய் அலுவலர் துரை ரவிச்சந்திரன், வால்பாறை எம்.எல்.ஏ கஸ்தூரி வாசு உள்ளிட்டோர் பார்வையிட்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் தெரிவித்தனர். 

கேரளாவில் பெய்து வரும் கன மழையில் சிக்கிக் கொண்டிருப்பதாக விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தைச் சேர்ந்த 70 க்கும் மேற்பட்ட ஜவுளி வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். ஆயத்த ஆடைகள், புடவைகள் உள்ளிட்டவற்றை விற்பனை செய்வதற்காக பட்டனம் திட்டா மாவட்டத்தில் உள்ள ரான்னி பகுதிக்கு சென்ற இவர்கள், அங்கு பெய்த கன மழையில் சிக்கிக் கொண்டுள்ளனர்.

அங்குள்ள தபால் நிலையத்தின் மாடியில் தஞ்சம் அடைந்த நிலையில், தங்களுடன் இருந்த மலையாளிகளை மட்டும் மீட்புக் குழுவினர் படகு மூலம் மீட்டுச் சென்றதாகவும், தமிழகத்தைச் சேர்ந்த தங்களை கண்டு கொள்ளவில்லை என்றும் குற்றம் சாட்டியுள்ளனர். தங்களை மீட்க தமிழக அரசு, கேரள அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பவானிசாகர் அணையில் இருந்து 70 ஆயிரம் கனஅடி நீர் வெளியேற்றப்பட்டுள்ளதால், கரையோரங்களில் உள்ள 500க்கும் மேற்பட்ட வீடுகள் நீரில் மூழ்கியுள்ளன. தொட்டம்பாளையம், பகுத்தம்பாளையம், சத்தியமங்கலம், கோட்டு வீராம்பாளையம், ரங்கசமுத்திரம், கொமாராபாளையம், அரியப்பம்பாளையம், அரசூர் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட கிராமங்களில் வெள்ளநீர் புகுந்துள்ளது.

இதனால் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வீடுகளை இழந்து தவிக்கின்றனர். இதனையடுத்து, அவர்கள் அனைவரும் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். பழைய கலையனூர், கொத்துக்காடு உள்ளிட்ட பகுதிகளில், 5 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்டிருந்த வாழை, மஞ்சள், மக்காச்சோளம் உள்ளிட்டவை நீரில் மூழ்கின. 

கன்னியாகுமரி மாவட்டத்தில் வீடுகளுக்குள் மழை நீர் புகுந்ததை அடுத்து, 149 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். தங்கள் வீடுகளுக்குள் மழை நீர் புகுந்துவிட்டதால், பல்வேறு பொருட்கள் சேதம் அடைந்ததோடு, பல்வேறு சான்றிதழ்களும் மழையில் நனைந்து வீணாகிவிட்டதாக வேதனை தெரிவித்துள்ளனர்.

அவற்றை மீட்க அதிகாரிகள் யாரும் தங்களுக்கு உதவ முன்வரவில்லை என்றும் அவர்கள் புகார் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட மக்களை, போலீசார் சமாதானம் செய்தனர்.