வாகன ஓட்டிகள் ஹெல்மெட், சீட் பெல்ட் அணிவது கட்டாயம் என்ற விதிகளை முழுமையாக நடைமுறைப்படுத்தாதது ஏன் என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
மோட்டார் சட்ட விதிகளின்படி, வாகன ஓட்டிகள் சீட் பெல்ட், ஹெல்மட் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ள நிலையில், தமிழக அரசு அதனை நடைமுறைப்படுத்தவில்லை என சென்னை கொரட்டூரைச் சேர்ந்த கே.கே.ராஜேந்திரன் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நீதிபதி மணிகுமார், நீதிபதி சுப்பிரமணிய பிரசாத் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
அப்போது அரசுத்தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், வழக்கு தொடர்பாக 2007-ம் ஆண்டு தமிழக அரசாணை வெளியிட்டதாகக் கூறினார். உடனே குறுக்கிட்ட நீதிபதிகள், அரசாரணை வெளியிட்டால் மட்டும் போதாது அதனை, அரசு முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்று தெரிவித்தனர்.
மோட்டார் வாகன சட்ட விதிகளின்படி, இருசக்கர வாகனங்களில் செல்லும் இருவரும் ஹெல்மட் அணிவதும், நான்கு சக்கர வாகனங்களில் செல்வோர் சீட் பெல்ட் அணிவதும் கட்டாயம் என்று குறிப்பிட்ட நீதிபதிகள், அதனை உறுதியாக நடைமுறைப்படுத்த தமிழக அரசுக்கு உத்தரவிட்டனர்.
மேலும், இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன என்பது குறித்து தமிழக அரசு 23-ம் தேதி பதில் மனுத்தாக்கல் செய்யவும் நீதிபதிகள் ஆணையிட்டனர்.