கேரளாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் வெள்ளம் வடியத் தொடங்கியிருப்பதால் இயல்பு வாழ்க்கை மெல்ல திரும்பி வருகிறது.
கேரளாவில் கடந்த 20 நாட்களில், 87 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கொட்டிய அடைமழை, அங்குள்ள 14 மாவட்டங்களையும் புரட்டிப் போட்டது. நிலச்சரிவு மற்றும் வெள்ளத்தில் சிக்கி 400-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில், நிவாரண முகாம்களில் 12 லட்சம் பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், மழை குறையத் தொடங்கியுள்ளதால், கேரளாவின் பெரும்பாலான பகுதிகளில் வெள்ள நீர் வடியத் தொடங்கியுள்ளது.
இதனால் மெல்ல மெல்ல இயல்பு நிலை திரும்பி வருகிறது. வெள்ள பாதிப்பு ஏற்பட்ட பகுதிகளில் சீரமைப்பு பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. கொச்சி விமான நிலையத்தை சீரமைக்கும் பணிகள் துரித கதியில் நடந்து வருவதால் வரும் 26-ம் தேதி முதல் விமானங்கள் தடையின்றி இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. திருவனந்தபுரம் - மங்களூரு, பாலக்காடு, திருச்சூர்- குருவாயூர், கொல்லம் - செங்கோட்டை, எர்ணாகுளம்- சோரன்பூர் இடையேயான ரயில் போக்குவரத்து இரண்டு நாட்களில் சீரடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது