#DMKThalaivarStalin என்ற ஹேஷ்டாக், ட்விட்டரில் இந்திய அளவில் ட்ரெண்டாகி வருகிறது.
திமுகவின் தலைவர் பதவியில் சுமார் 50 ஆண்டுகாலம் வரை நீடித்து வந்த கருணாநிதி கடந்த 7ம் தேதி உடல் நலக்குறைவால் காலமானார். இதையடுத்து கட்சியின் புதிய தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் அறிவிக்கப்பட்டது. தலைவர் பதவிக்கு மு.க.ஸ்டாலின் வேட்பு மனு தாக்கல் செய்தார்.
அவரை அப்பதவிக்கு முன்மொழிந்து கட்சியிலுள்ள அனைத்து மாவட்டச் செயலாளர்களும் மனு தாக்கல் செய்தனர். இதே போல் பொருளாளர் பதவிக்கு திமுகவின் முதன்மை செயலாளரும், எம்.எல்.ஏவுமான துரைமுருகன் வேட்பு மனு தாக்கல் செய்தார். மு.க.ஸ்டாலினுக்கு போட்டியாக யாரும் வேட்பு மனுதாக்கல் செய்யவில்லை.
அதனால், ஒரு மனதாக திமுகவின் தலைவராக மு.க.ஸ்டாலின் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு, சென்னையில் இன்று நடைபெற இருக்கும் திமுக பொதுக்குழு கூட்டத்தில் வெளியிடப்படும். அதனையடுத்து, திமுகவின் 2வது தலைவராகப்போகும் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில் #DMKThalaivarStalin என்ற ஹேஷ்டாகை பயன்படுத்தி இணையதளவாசிகள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்த ஹேஷ்டாக் ட்விட்டர் இந்திய ட்ரெண்டிங்கில் முதலிடத்தில் இருக்கிறது.