ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்தை, 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க சிபிஐக்கு டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனம் 305 கோடி ரூபாய் அந்நிய நேரடி முதலீட்டை பெற அனுமதி அளித்ததில் முறைகேடு நடந்ததாக சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை குற்றம்சாட்டியது. இதுதொடர்பான வழக்கில் புகாருக்கு ஆளான முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், முன்ஜாமீன் கோரி உச்சநீதிமன்றத்தை அணுகினார். அவசர மனுவாக விசாரிக்க முடியாது என உச்சநீதிமன்றம் கைவிரித்துவிட்ட நிலையில், நேற்று முன்தினம் இரவு சிபிஐ அதிகாரிகளால் ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டார்.
ப.சிதம்பரத்திற்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு பிறகு, சிபிஐ தலைமை அலுவலகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு அவரிடம் சிபிஐ அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தினர். இதையடுத்து, அவர் ரோஸ் அவன்யூவில் உள்ள சிபிஐ நீதிமன்றத்தில் நேற்று ஆஜர்படுத்தப்படுத்தப்பட்டார்.
இதையொட்டி நீதிமன்ற வளாகத்தில் 100க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர். மேலும் நீதிமன்ற வளாகம் முழுவதும் வழக்கறிஞர்களால் நிரம்பி வழிந்தது. நீதிபதி அஜய் குமார் குஹார் முன்னிலையில் சிதம்பரத்தை சிபிஐ அதிகாரிகள் ஆஜர்படுத்தினர். சிதம்பரம் சார்பில் வாதங்களை முன் வைக்க அபிஷேக் மனு சிங்வி தலைமையிலான குழு ஆஜரானது. சிபிஐ சார்பில் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, உதவி சொலிசிட்டர் ஜெனரல் நடராஜ் ஆகியோர் வாதிட்டனர். அப்போது ப.சிதம்பரம் விசாரணைக்கு சரியாக ஒத்துழைக்கவில்லை என்று புகார் கூறிய சிபிஐ, 5 நாள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கேட்டு மனுத்தாக்கல் செய்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த சிதம்பரம் தரப்பு வழக்கறிஞர் கபில் சிபல், சிதம்பரத்திடம் கேட்பதற்கென்று சிபிஐயிடம் கேள்விகளே இல்லை என்று குற்றம்சாட்டினார். அப்போது குறுக்கிட்ட சிபிஐ வழக்கறிஞர், துஷார் மேத்தா, சிபிஐ கேட்ட எந்த கேள்விக்கும் சிதம்பரம் சரியாக பதிலளிக்கவில்லை என குற்றம்சாட்டினார். மேலும், முழுமையான விசாரணை நடைபெற வேண்டும் என்றால் அவரை காவலில் எடுத்து தான் விசாரிக்க வேண்டும் என வாதிட்டார்.
தனைத்தொடர்ந்து, நீதிபதி அஜய் குமார் குஹார் சுமார் ஒரு மணி நேரத்திற்கு பின்னர் தமது உத்தரவை பிறப்பித்தார். அதில் இவ்வழக்கு தொடர்பாக ப.சிதம்பரத்தை வரும் ஆகஸ்ட் 26ம் தேதி வரை காவலில் எடுத்து விசாரிக்க சிபிஐக்கு அனுமதி அளிக்கப்படுகிறது என குறிப்பிட்டார். மேலும், சிபிஐ காவலில் உள்ள ஐந்து நாட்களிலும் ப.சிதம்பரத்தை அவரது குடும்பத்தினர், வழக்கறிஞர்கள் சந்திக்க தினமும் 30 நிமிடங்கள் அனுமதி அளித்து நீதிபதி உத்தரவிட்டார்.
இதையடுத்து ப.சிதம்பரத்தை சிபிஐ அதிகாரிகள் சிபிஐ தலைமை அலுவலகத்துக்கு அழைத்து சென்றனர். வீட்டில் சமைக்கப்பட்ட உணவை சாப்பிட சிதம்பரம் அனுமதி கோரிய நிலையில், நீதிமன்றத்திடம் அனுமதி பெறாததால் வீட்டு உணவை சாப்பிட சிதம்பரத்துக்கு அனுமதி மறுக்கப்பட்டது. சிபிஐ அலுவலகத்தின் கேண்டீன் உணவை சாப்பிட மறுத்த சிதம்பரம், இரவு முழுவதும் பட்டினியாக இருந்ததாக கூறப்படுகிறது. சிபிஐ தலைமை அலுவலகத்தில் தரைதளத்தில் தங்கியுள்ள சிதம்பரத்தை சிபிஐ அதிகாரிகள் இருவர் தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும், அந்த இடத்தில் ஏராளமான சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
credit ns7.tv