புதன், 21 ஆகஸ்ட், 2019

ஹைதராபாத்தையும் யூனியன் பிரதேசமாக மாற்றவுள்ளதா மத்திய அரசு? August 21, 2019


Image
ஜம்மு காஷ்மீரைத் தொடர்ந்து தெலங்கானாவின் தலைநகரான ஹைதராபாத்தையும் யூனியன் பிரதேசமாக மத்திய அரசு மாற்றவுள்ளது என வெளியாகியுள்ள தகவல்கள் அரசியல் அரங்கில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
2014 இல் ஆந்திர மாநிலம் இரண்டாகப் பிரிக்கப்பட்ட போது, காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட பெரும்பாலானக் கட்சிகளும் ஹைதராபாத்தை யூனியன் பிரதேசமாக அறிவிக்க வேண்டுமென்று கோரிக்கை வைத்தனர். ஆனால் ஏ.ஐ.எம்ஐஎம் கட்சியின் தலைவர் அசாதுதீன் ஓவைசியின் கடுமையான எதிர்ப்பைத் தொடர்ந்து ஆந்திரா, தெலுங்கானா என இரண்டு மாநிலங்களுக்கும் பொதுவானத் தலைநகரமாக ஹைதராபாத் அறிவிக்கப்பட்டது. வருகிற செப்டம்பர் 17 ஆம் தேதி ஹைதராபாத் விடுதலை தினம் கொண்டாடப்பட உள்ள நிலையில், ஜம்மு காஷ்மீர் போல ஹைதராபாத்தும் யூனியன் பிரதேசமாக மாற்றப்படலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது. 
2019 நாடாளுமன்றத் தேர்தலில் 20 சதவீத வாக்கு சதவீதத்துடன் 4 சீட்டுகளைக் கைப்பற்றி முதல்வர் கே.சி. சந்திரசேகர ராவ் தலைமையிலான தெலங்கானா ராஷ்டிரிய சமிதிக்கு அதிர்ச்சி அளித்தது பாஜக. இந்நிலையில் ஹைதராபாத் யூனியன் பிரதேசமாக்கப்பட்டால் ஓவைசிக்கும் பாஜகவிற்கு இடையேயான போட்டியாக தேர்தல் களம் மாறும் என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள். ஹைதராபாத்தை பிரிக்கும் முயற்சியில் மத்திய அரசு ஈடுபட்டால் தற்போது வரை மோடி எதிர்ப்பை வலுவாக முன்வைக்காமல் இருக்கும் முதல்வர் கே.சி.ஆர், மோடி எதிர்ப்பை முன்வைத்து காங்கிரஸுடன் கைகோர்க்க வாய்ப்புள்ளது என்கிறார்கள் அவர்கள்.
இந்த வருடம் ஹைதராபாத் விடுதலை தினத்தை அலுவல் ரீதியாக கொண்டாடுவோம் என்றும், உள்துறை அமைச்சர் அமித்ஷா ஹைதராபாத்தில் தேசிய கொடி ஏற்றுவாரென்றும் சூளுரைக்கிறார்கள் உள்ளூர் பாஜகவினர்.  பஞ்சாப் மற்றும் ஹரியானாவிற்கு பொதுவான தலைநகரமாக சண்டிகர் இருப்பது போல, யூனியன் பிரதேசம் ஆக்கப்பட்டால் ஹைதராபாத்தும் ஆந்திரா மற்றும் தெலுங்கானாவின் பொதுவான தலைநகரமாக மாற்றப்பட வாய்ப்பு இருக்கிறது என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.
இந்த முடிவின் மூலமாக தொழில் வளர்ச்சி மிகுந்த வளம்கொழிக்கும் மாநகரமான ஹைதராபாத், தங்கள் கையைவிட்டுப் போனதால் வருத்தத்தில் இருக்கும் ஆந்திர மக்களையும் திருப்திப்படுத்தலாமென நினைக்கிறது மத்திய அரசு. தெலங்கானாவிற்கு வருவாயை அள்ளிக் கொடுக்கும் ஹைதராபாத்தை யூனியன் பிரதேசமாக்கும் முடிவை மத்திய அரசு எடுத்தால் அதை தெலங்கானா மக்கள் ஏற்றுக்கொள்வார்களா என்ற கேள்வியும் இங்கு எழுந்துள்ளது. இது குறித்த தகவல்களை மறுக்காத தெலங்கானா பாஜக தலைமை, தற்போது இதுபற்றி பேசமுடியாது என கூறியுள்ளது.    
credit ns7.tv