வெள்ளி, 30 ஆகஸ்ட், 2019

இங்கிலாந்து நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் முதல்வர் பழனிசாமி சந்திப்பு!

Image
இங்கிலாந்து நாட்டிற்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அந்நாட்டு நாடாளுமன்ற உறுப்பினர்களை சந்தித்து பேசினார். 
அரசு முறை பயணமாக இங்கிலாந்து தலைநகர் லண்டன் சென்றுள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் சர்வதேச மனிதவள மேம்பாட்டு நிறுவனத்துடன் சுகதாரத்துறை ஒத்துழைப்பு தொடர்பான ஒப்பந்தங்கள் நேற்று கையெழுத்தானது. தமிழகத்தில் நகர உட்கட்டமைப்பு, வீட்டுவசதி, பசுமை எரிசக்தி போன்ற துறைகளில் முதலீடு செய்யவருமாறு அழைப்பு விடுத்து பிரிட்டன் நாடாளுமன்ற வளாகத்தில் அந்நாட்டு எம்.பி.க்களுடன் முதலமைச்சர் இன்று கலந்துரையாடினார். 
அப்போது மருத்துவ காப்பீட்டு திட்டங்களை செயல்படுத்துவதில் தமிழகம் முன்னோடி மாநிலமாக திகழ்வதாக அவர்களிடம் முதலமைச்சர் பெருமிதம் தெரிவித்தார். இந்தியாவில் சிறந்த மருத்துவர்களையும் செவிலியர்களையும் கொண்ட மாநிலமாக தமிழகம் திகழ்வதாகவும் முதலமைச்சர் கூறினார். மேலும், தமிழகத்தில் ஆரம்ப சுகாதார நிலையங்கள் 24 மணி நேரமும் செயல்படுவதாக தெரிவித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, இங்கிலாந்தில் செயல்படுத்தப்பட்டு வரும் நவீன மருத்துவ தொழில்நுட்பங்களை தமிழகத்தில் செயல்படுத்தபடுத்த திட்டமிட்டுள்ளதாவும் தெரிவித்தார்.

credit ns7.tv