புதன், 28 ஆகஸ்ட், 2019

ஐ.நாவின் மனித உரிமை கூட்டத்தில் பங்கேற்ற தமிழர்களின் பட்டியல்!

credit ns7.tv
Image
திமுக தலைவர் ஸ்டாலினுக்கு மனித உரிமை கூட்டத்தில் பங்கேற்க ஐ.நா அனுமதி அளித்துள்ள நிலையில் இதுவரை இந்த கூட்டத்தில் பங்கேற்ற தமிழக அரசியல் தலைவர்கள் யார் யார் என்பதை பார்க்கலாம்.
தமிழகத்திற்கான முதலீடுகளை ஈர்க்க தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளிநாடு சென்றுள்ள நிலையில் திமுக தலைவர் ஸ்டாலின் ஐ.நா மன்றத்தில் உரையாற்ற வெளிநாடு செல்ல உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.  ஐ.நா. மனித உரிமை மன்றத்தில் தன்னார்வ நிறுவனங்கள் மூலம் விண்ணப்பித்தால் மனித உரிமை கூட்டத்தில் பங்கேற்று பேச அனுமதி அளிக்கப்படும். இதில் தமிழகத்தை சேர்ந்த பல்வேறு அரசியல் கட்சி பிரதிநிதிகளும் பங்கேற்று தங்கள் கருத்துக்களை தெரிவித்துள்ளனர். இதில்
மார்ச் 27, 2017 அன்று ஐ.நா மனித உரிமை மன்றத்தில் பேசிய பாமக இளைஞரணி செயலாளர் அன்புமணி ராமதாஸ் இலங்கையில் போர் நிறைவுப்பெற்ற பின்பும் தொடர்ந்து இனப்படுகொலை நடைப்பெற்று வருவதாகவும் ஆகவே ஐ.நா பொதுவாக்கெடுப்பு நடத்த வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தார். 
செப்டம்பர் 25, 2017 அன்று ஐ.நா மன்ற கூட்டத்தில் பங்கேற்று பேசிய மதிமுக பொதுச்செயலாளர் வைகோ இலங்கையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைக்க பொதுவாக்கெடுப்பு நடத்த வேண்டுமென கோரிக்கை வைத்தார். 
இந்நிலையில் மார்ச் 19, 2019 அன்று ஐ.நா. பன்னாட்டு நீதிமன்றத்தில் விசாரணை நடத்த வேண்டுமென்றும், இலங்கையில் நடந்த போர் குற்றத்தை இனப்படுகொலை என அறிவிக்க வேண்டும் என ஐ.நா மன்றத்தில் முக்குலத்தோர் புலிப்படை தலைவர் கருணாஸ் தனது கருத்தினை முன்வைத்தார்.  
 இந்த மன்றத்தில் 2015 செப்டம்பர் 15ம் தேதி அன்று பேசிய மே17 இயக்க தலைவர் திருமுருகன் காந்தி இலங்கை போர் குற்றத்தை இலங்கை அரசு விசாரிப்பது இயற்கை நீதிக்கு எதிரானது என்று குறிப்பிட்டார். அதே போல ஐ.நா. மன்றத்தில் கடந்த 2018ம்ஆண்டு ஜூலை மாதம் நடந்த கூட்டத்தில் பேசிய திருமுருகன் காந்தி தூத்துக்குடி துப்பாக்கி சூடு குறித்து பேசியது தொடர்பான சர்ச்சையில் கைது செய்யப்பட்டார். 
ஐ.நா மனித உரிமை மன்றத்தில் பேசுவதற்கு பங்கேற்பாளர்களுக்கு 3 நிமிடம் நேரம் ஒதுக்கப்படும், கருணாஸ் தமிழில் பேசியதால்  மொழிப்பெயர்புடன் 6 நிமிடம் பேசினார்.
இந்த நிலையில் ஐ.நா. மனித உரிமை மன்றத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் பங்கேற்க ஐ.நா மன்ற அனுமதி அளித்துள்ளது. இந்த கூட்டத்தில் ஸ்டாலின் பங்கேற்பது குறித்து அதிகாரப்பூர்வமாக திமுக தரப்பில் அறிவிக்கப்படவில்லை. ஏற்கனவே 2017ம்  ஆண்டு கூட்டத்தில் பங்கேற்க அனுமதி அளிக்கப்பட்ட போது ஸ்டாலின் சட்டமன்ற பணிகள் காரணமாக பங்கேற்கவில்லை. 
தற்போது பிரான்ஸ் நாட்டில் உள்ள தன்னார்வ நிறுவனத்தின் விண்ணப்பம் மூலம் இந்த கூட்டத்தில் ஸ்டாலின் பங்கேற்கும் நிலையில் ஈழப்படுகொலை குறித்து பேசுவார் என திமுக தரப்பில் சொல்லப்பட்டாலும் இந்த கூட்டத்தில் ஈழப்படுகொலை குறித்த விவாதம் நடைபெறவில்லை. எனவே, காஷ்மீர் சிறப்பு அந்தஸ்த்து ரத்து செய்யப்பட்டது  குறித்தும் நாட்டில் உள்ள வேறு சில மனித உரிமை பிரச்சனைகள் குறித்து பேசுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.