உலகின் நுரையீரலாக கருதப்படும் அமேசான் காடுகளில் ஏற்பட்டுள்ள வரலாறு காணாத காட்டுத்தீ காரணமாக உலகம் முழுவதும் பெரும் சுற்றுச்சூழல் சீர்கேடு ஏற்படும் என்ற அச்சம் எழுந்துள்ளது.
அமேசான் மழைக்காடுகளின் தற்போதைய நிலையை நினைத்துப் பார்க்கவே பயமாக உள்ளது. இப்படி கூறியுள்ளவர் டைட்டானிக் நடிகர் லியர்னடோ டிகாப்ரியோ. காரணம் பூமியின் நுரையீரல் என அழைக்கப்படும் அமேசான் கடந்த சில தினங்களாக நெருப்பின் கோர தாண்டவத்திற்கு இரையாகி வருவது தான். இந்த வரலாறு காணாத காட்டுத்தீயில் சிக்கி பல்லாயிரக்கணக்கான விலங்குகளும், பறவைகளும் பலியாகி இருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
55 லட்சம் சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் படர்ந்து விரிந்திருக்கும் அமேசான் காடுகள் தான் உலகின் 10 சதவிகித தாவர வகைகள், விலங்கினங்களின் புகழிடமாக திகழ்கிறது. அதோடு சுமார் பத்து லட்சம் பழங்குடிகள் இங்கு வசித்து வருகிறார்கள். தற்போது ஏற்பட்டுள்ள இந்த தீவிபத்தில், அவர்கள் என்ன ஆனார்கள் என, உலகெங்கும் உள்ள சமூக ஆர்வலர்கள் வேதனையில் ஆழ்ந்துள்ளனர். காட்டுத்தீ ஏற்பட்ட அமேசான் காடுகளில் இருந்து, சுமார் 2 ஆயிரம் கிலோமீட்டர் தொலைவில் உள்ள, பிரெசிலின் சா பாலோ நகர் முழுவதும் கரும்புகை சூழ்ந்துள்ளது.
2 வாரங்களுக்குமுன் ஏற்பட்ட இந்த காட்டுத்தீ, தற்போது வேகம் எடுக்க தொடங்கியுள்ளதால் பலநூறு கிலோ மீட்டர் தொலைவுக்கு வனம் கொழுந்துவிட்டு எரிகிறது. லட்சக்கணக்கான மரங்கள் தீக்கிரையானதால் ஏற்பட்ட புகை மூட்டம் பிரேசில், பொலிவியா, பெரு, கொலம்பியா உள்ளிட்ட பல நாடுகளிலும் பரவியுள்ளது என்றால், இதன் தீவிரத்தை நாம் உணர்ந்து கொள்ளலாம்.
நாசா வெளியிட்ட சாட்டிலைட் படத்தில், கிட்டத்தட்ட வடக்கு பிரேசில் முழுவதும் புகை மண்டலமாக காட்சியளிக்கிறது. அதன் அளவு கிட்டத்தட்ட வடக்கு பிரேசிலானது தென்னிந்தியாவை விடவும் பரப்பளவில் மிகப்பெரியது. தொடர்ந்து வெளியேறி வரும் இந்த கரும்புகையால், பட்டப்பகல் கூட அடர்ந்த இரவு போல மாறியுள்ளதாக, பிரேசில் மக்கள் கூறுகின்றனர்.
கடந்த 6 மாதத்தில் மட்டும், அமேசானில் மொத்தம் 73 ஆயிரம் முறை, காட்டுத் தீ ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த ஆண்டை காட்டிலும் இது 83 சதவிகிதம் அதிகம். இதுவரை இல்லாத அளவிற்கு பற்றி எரியும் காட்டுத்தீயால் தென் அமெரிக்க கண்டத்தின் பருவ நிலை மாற்றத்தில் மிகப்பெரிய தாக்கம் ஏற்பட்டுள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். இதனால் பிரேசில் மட்டும் அல்லாமல் அதன் அண்டை நாடுகளை சேர்ந்த லட்சக்கணக்கான மக்கள், ஆபத்தை எதிர்நோக்கியுள்ளனர்.
உலகெங்கும் உள்ள தொழிற்சாலைகள் மற்றும் வாகனங்களில் இருந்துவெளியேறும் பல மில்லியன் டன், கார்பன் டை ஆக்சைடு வாயுவை, ஆக்சிஜனாக மாற்றி உலக வெப்பநிலையை சமநிலையில் வைத்திருப்பதில் அமேசான் காடுகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. இப்போது அமேசானின் பெரும்பகுதி அழிந்துள்ளதால் நாம் உலக வெப்பமயமாதல் அபாயத்தை எதிர்நோக்கியுள்ளதாகவும் அஞ்சப்படுகிறது.
அமேசானின் மத்தியப்பகுதியில் பொழியும் மழை தரையைத் தொடவே 10 நிமிடங்களாகும். இத்தகைய அடர்ந்த காட்டில் ஒருமரம் விழுந்தால் அது மீண்டும் முளைக்க பல வருடங்களாகலாம். இந்நிலையில் தற்போது இங்கு ஏற்பட்டுள்ள காட்டுத்தீயில் இருந்து அமேசான் காடுகள் மீண்டு வர பல நூறு வருடங்கள் ஆகலாம் என சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.
credit ns7.tv