புதன், 21 ஆகஸ்ட், 2019

தனியார் தண்ணீர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் வேலைநிறுத்தம்...! August 21, 2019


தனியார் தண்ணீர் லாரிகள் சிறைபிடிக்கப்படுவதை கண்டித்தும், உரிமையாளர்கள் மீது திருட்டு வழக்கு பதிவு செய்வதற்கு எதிராகவும் தனியார் தண்ணீர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் வேலைநிறுத்த போராட்டத்தை தொடங்கியுள்ளனர். 
தனியார் இடங்களிலும், விவசாயக் கிணறுகளிலும் இருந்து தண்ணீர் எடுப்பதற்கு உயர்நீதிமன்ற வழிகாட்டுதலின்படி சில நிபந்தனைகளை தமிழக அரசு விதித்தது. இதனால், பாதிக்கப்படுவதாகக் கூறி தனியார் தண்ணீர் லாரி உரிமையாளர்கள் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். 
பேச்சுவார்த்தைக்கு பின் போராட்டம் கைவிடப்பட்டது. இதனிடையே  தண்ணீர் லாரிகள் சிறைபிடிக்கப்படுவதை கண்டித்தும், உரிமையாளர்கள் மீது திருட்டு வழக்கு பதிவு செய்வதற்கு  எதிர்ப்பு தெரிவித்தும் அவர்கள் இன்று முதல் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் மாநிலம் முழுவதும் 15,000 க்கும் மேற்பட்ட தனியார் தண்ணீர் லாரிகள் இயங்கவில்லை என கூறப்படுகிறது. 
வேலைநிறுத்தத்தால் அடுக்குமாடி வளாகங்கள், ஐடி நிறுவனங்கள் மற்றும் விடுதிகள் பாதிக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது. இதற்கிடையே அரசு அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாகவும், தங்களின் 70 சதவிகித கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக உறுதி அளித்துள்ளதாகவும் தனியார் தண்ணீர் லாரி உரிமையாளர்கள் சங்க தலைவர் நிஜலிங்கம் தெரிவித்துள்ளார்.
credit ns7.tv