புதன், 21 ஆகஸ்ட், 2019

ஏழை, பணக்காரர்கள் எல்லோரையும் ஒரே மாதிரி கண்ணியத்தோடு நடத்துங்கள்: நீதிமன்றம் அறிவுரை! August 20, 2019

Image
ஏழைகளாக இருந்தாலும், பணக்காரர்களாக இருந்தாலும் அரசுகள் அவர்களை சமமாகவும், கண்ணியத்துடன்  நடத்த வேண்டும் என்று, 15000 குடும்பங்களை இடம் மாற்றுவது தொடர்பான வழக்கில் மும்பை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
மஹாராஸ்டிர மாநிலம் ப்ரிஹன்மும்பை நகராட்சியில் தன்சா குடிநீர் குழாய் செல்லும் பகுதியில் ஆக்கிரமிப்பு செய்து வாழும் 15,000க்கும் மேற்பட்ட குடும்பங்களை அந்த இடத்திலிருந்து அப்புறப்படுத்தி வருகிறது. கடந்த ஆண்டு அப்பகுதியில் சட்டத்திற்கு புறம்பாக கட்டப்பட்டிருந்த கட்டிடங்கள் மற்றும் ஆக்கிரமிப்புகளை இடித்த நகராட்சி நிர்வாகம் அந்த பகுதிகளில் வாழ்ந்த குடும்பங்களுக்கு மாற்று ஏற்பாடாக மஹுல் நகரில் இடம் தேர்வு செய்து கொடுத்தது.
நகராட்சி வழங்கிய மஹுல் பகுதியில் மூன்று சுத்திகரிப்பு தொழிற்சாலைகளும், ஒரு ரசாயன தொழிற்சாலையும் இயங்கி வருகின்றது. நகராட்சி வழங்கியிருக்கும் அந்த பகுதியானது மனிதர்கள் வாழ்வதற்கு தகுதியற்ற இடம் என்று பசுமை தீர்ப்பாயம் 2015ம் ஆண்டும், ஐஐடி மும்பை இந்த ஆண்டும் தெரிவித்துள்ளது. இந்த பகுதிகளுக்கு இடம் பெயர மறுப்பு தெரிவித்துள்ள ப்ரிஹன் மும்பை வாழ் மக்கள் மும்பை உயர்நீதி மன்றத்தில் முறையீடு செய்துள்ளனர்.
இந்த வழக்கானது, நீதிபதிகள் ப்ரதீப் நந்ரஜோக் மற்றும் பாரதி டாங்ரே ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், “நோவாவும் அவரது படகும்”(Noah and his ark) கதையை மேற்கோள்காட்டிய நீதிபதிகள் “வெள்ளம் வந்தபோது, நோவா எந்த ஒரு விலங்கையும் விட்டுவிடவில்லை; எல்லாவற்றையும் தன் படகில் ஏற்றிக்கொண்டுச் சென்றான்”. அதே போல அரசும், மக்கள் ஏழைகளாக இருந்தாலும் பணக்காரர்களாக இருந்தாலும் அவர்கள் மீது பாரபட்சம் காட்டாமல் அகரை செலுத்த வேண்டும் என்று தெரிவித்தனர்.
இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில்  வேறு நீதிபதிகள் அமர்வில் நடைபெற்ற வழக்கு விசாரணையின் போது, மாசுபட்ட பகுதிகளில் வசிக்க வேண்டும் என்று மக்களை, மாநில அரசு கட்டாயப்படுத்தக்கூடாது; மஹூல் பகுதியில் வாழ விருப்பமில்லாதவர்களுக்கு மாதம் 15000 ரூபாயை மாநில அரசு வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில், உயர்நீதிமன்றத்தின் உத்தரவின் மீது உச்சநீதிமன்றத்தின் தடையாணை நிலுவையில் இருப்பதால், வழக்கு தொடர்ந்தவர்களுக்கு அரசு நிர்வாகம் வாடகையை கொடுக்கவில்லை என்று அரசுத் தரப்பு தெரிவித்தது.
தரவுகளை சரிபார்த்த நீதிபதிகள், அரசின் மேல்முறையீட்டு வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கின்றது. உயர்நீதிமன்றத்தின் உத்தரவின் மீது உச்சநீதிமன்றம் எந்த தடையையும் விதிக்கவில்லை என்று தெரிவித்ததோடு, ஏழையாக இருந்தாலும், பணக்காரர்களாக இருந்தாலும் அவர்களை கண்ணியத்தோடு ஒரே மாதிரியாகதான் நடத்த வேண்டும்; உங்களால் 5 கோடி மக்களை கும்பமேளா நிகழ்வில் சமாளிக்க முடிகிறது. ஆனால் 60000 மக்களை சமாளிக்க முடியாதா என்று அரசுக்கு நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
இந்த வழக்கின் அடுத்த விசாரணை, அடுத்த வாரம் மீண்டும் வர இருக்கிறது.

credit ns7.tv