Credit NS7.tv
370வது சட்டப் பிரிவு நீக்கப்பட்ட பின்னர் ஜம்மு காஷ்மீரில் கலவரத்தைக் கட்டுப்படுத்த பெல்லட் குண்டுகள் பயன்படுத்தப்பட்டது உண்மைதான் என அம்மாநில ஆளுநர் சத்யபால் மாலிக் கூறியுள்ளார். எனினும் இதனால் யாரும் பெரிய காயம் அடையவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
ஐம்மு காஷ்மீருக்கு சிறப்பு அதிகாரம் வழங்கும் 370 மற்றும் 35 ஏ சட்டப்பிரிவுகள் கடந்த ஆகஸ்ட் மாதம் 5ந்தேதி ரத்து செய்யப்பட்டது. அதன் பிறகு முதல்முறையாக அம்மாநில ஆளுநர் சத்யபால் மாலிக் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். ஜம்மு காஷ்மீரில் தற்போது நிலைமைக் கட்டுக்குள் இருப்பதாக அப்போது அவர் கூறினார்.
காஷ்மீரில் செய்யப்பட்ட மாற்றங்களுக்கு பிறகு அங்கு வன்முறையால் உயிரிழப்போ, பொருள் சேதமோ ஏற்படவில்லை என்றும் சத்யபால் மாலிக் விளக்கம் அளித்தார். கலவரத்தைக் கட்டுப்படுத்த பெல்லட் குண்டுகளை பயன்படுத்தி பாதுகாப்பு படையினர் சுட்டது உண்மைதான் எனக் கூறிய மாலிக், எனினும் இடுப்பிற்கு கீழேதான் சுடப்பட்டதாக கூறினார். ஒருவர்தான் கழுத்தில் காயம் அடைந்ததாகவும் அவரது உடல்நிலையும் தற்போது நலமாக உள்ளதாகவும் மாலிக் சத்யபால் தெரிவித்தார். காஷ்மீருக்கு வழங்கப்பட்ட செல்போன் சேவை மற்றும் இணையத்தள சேவைகளை தீவிரவாதிகள்தான் பயன்படுத்தி வந்ததாகக் கூறிய சத்யபால் மாலிக், அதனாலேயே அங்கு அந்த சேவைகளுக்கு தடை விதிக்கப்பட்டதாக விளக்கம் அளித்தார்.
படிப்படியாக செல்போன் மற்றும் இணையத்தள சேவைகள் ஐம்மு காஷ்மீரில் வழங்கப்படும் என்றும் ஆளுநர் கூறினார். ஜம்மு காஷ்மீரில் இயல்பு நிலை திரும்பியுள்ளதை விவரித்த அவர், அங்கு 3 ஆயிரம் தொடக்கப்பள்ளிகளும், ஆயிரம் நடுநிலைப் பள்ளிகளும் திறக்கப்பட்டு செயல்பட்டுவருவதாகக் கூறினார். லடாக்கில் அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகள் அமைதியாக செயல்பட்டு வருவதாகவும் சத்யபால் மாலிக் கூறினார்.