credit ns7.tv
கனமழை காரணமாக இமாச்சல பிரதேசம், உத்தரகாண்ட் உள்ளிட்ட மாநிலங்களில் பல்வேறு பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.
ஹிமாச்சல பிரதேச மாநிலத்தில் மேக வெடிப்பு காரணமாக மண்டி, காங்ரா உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்து வருவதால் அங்குள்ள பெரும்பாலான அணைகள் நிரம்பி வழிகின்றன. மேலும் பியாஸ் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் மண்டியில் உள்ள தொங்கு பாலம் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டது.
மழையின் காரணமாக பல்வேறு பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதால் போக்குவரத்து தடைப்பட்டுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகி உள்ளனர். குறிப்பாக தேசிய நெடுஞ்சாலைகளான குலு, மணாலி இடையே சாலை துண்டிக்கப்பட்டுள்ளது.
அடுத்த 24 மணி நேரத்திற்கும் மண்டி, காங்ரா உள்ளிட்ட மாவட்டங்களில் மிக அதிக கனமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. எனவே மலையோரங்கள், ஆற்றங்கரையோரம் வசிக்கும் மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன