சென்னையில் பேசப்படும் தமிழ் மிகவும் வித்தியாசமானது. இதற்கு ஒரு சுவாரஸ்யமான பின்னணி இருக்கிறது.
“நாஷ்டா துண்ணியா?, இட்டாந்து வா, பேஜாரு பண்ணாத!, குந்து!”
தலைநகர் சென்னையில் மட்டுமே கேட்கப்பெறும் வார்த்தைகள் இவை. சென்னையில் பேசப்படும் மொழி கொச்சையானது, மரியாதைக்குறைவான வார்த்தைகள் அதிகம், என குற்றம்சாட்டுபவர்களும் உண்டு. ஆனால் நிஜத்தில் அப்படி இல்லை என்பதே நிதர்சனம்.
சென்னையில் மட்டும் பிரத்யேகமாக பயன்படுத்தப்படும் வார்த்தைகள் எதுவும், தமிழ் மொழியில் இருந்து வந்தவை அல்ல என்பது கூடுதல் சுவாரஸ்யம்.
வங்காள விரிகுடாவின் விரிந்த பகுதியைக் கொண்ட சென்னையில், கால் பதிக்காத வெளிநாட்டுக்காரர்களே இல்லை என்று சொல்லலாம். டச்சு, போர்ச்சுகல், பிரெஞ்சு, இங்கிலாந்து, ஐரோப்பியர்களின் வருகைக்கு முன், அரேபியர்கள், சீனர்கள் என யார் வந்தாலும் சென்னையை தொடாமல் சென்றதில்லை.
தற்போது பேசப்படும் சென்னை பாஷையின் சில வார்த்தைகள் இந்த குறிப்பிட்ட நாட்டுக்காரர்களிடமிருந்து பெறப்பட்டது. இவற்றை தவிர மொழிவாரி மாநிலங்களாக பிரிக்கப்படுவதற்கு முன்பாக, அனைத்து மொழிக்காரர்களும் சென்னையில் வசித்ததால், அவர்களின் வார்த்தைகளும் சென்னை தமிழ் என்றாகிவிட்டது.
தற்போது பேசப்படும் சென்னை தமிழில் தெலுங்கு, ஹிந்தி, சமஸ்கிருதம் ஆகிய மொழிகளின் கலப்பும் அதிகளவில் இருக்கிறது. சென்னை பாஷை கொச்சையாக இருக்கிறது, என்று நிறைய பேர் சொல்ல கேட்டிருப்போம். ஆனால் சென்னையில் பயன்படுத்தப்படும் வார்த்தைகள் பல சங்க இலக்கியத்தில் இருக்கிறது, என்று சொன்னால் புருவம் உயரும் பலருக்கு.
உதாரணமாக, "ஊட்டுக்கு வந்துட்டு நின்னுனுகிற.. குந்து.". என்று சொன்னால் முகம் சுழிக்க பாத்திருப்போம். ஆனால் உட்காரு என்பதை விட இலக்கிய தரமும், அழகும் கொண்டது குந்து என்ற சொல்..அதனாலோ என்னவோ, பாவேந்தர் பாரதிதாசன் தனது கவிதையில், "காற்று குந்திச் சென்றது; மந்தி வந்து குந்தி" என்று குந்து, குந்தி என்ற சொற்களை, தனது கவிதைகளில் பயன்படுத்தி இருப்பார்.
சென்னையின் அடித்தட்டு மக்களே, இதுபோன்ற பிரத்யேக வார்த்தைகளை பயன்படுத்துகின்றனர். சென்னையில் பயன்படுத்தப்படும் சொற்கள் மிகவும் சுருக்கமானவை, என்ற கருத்தும் முன்வைக்கப்படுகிறது. இந்த பிரத்யேக
வார்த்தைகள் அனைத்தும், சாதாரண மனிதர்களிடம் இருந்தே வந்திருக்கின்றன. சென்னை பாஷையில், கொச்சை என்பதே கிடையாது. அப்படி தவறாக சித்தரிக்கப்படுவதாக கூறுகிறார், "சென்னை கதை" நூலின் ஆசிரியர் பார்த்திபன்.
வார்த்தைகள் அனைத்தும், சாதாரண மனிதர்களிடம் இருந்தே வந்திருக்கின்றன. சென்னை பாஷையில், கொச்சை என்பதே கிடையாது. அப்படி தவறாக சித்தரிக்கப்படுவதாக கூறுகிறார், "சென்னை கதை" நூலின் ஆசிரியர் பார்த்திபன்.
சென்னையின் ஒரு பகுதியில் மட்டுமே பேசப்பட்டுக் கொண்டிருந்த, சென்னை பாஷைய உலகறியச்செய்த பங்கு, தமிழ் திரையுலகு மற்றும் இலக்கிய உலகிற்கு உண்டு. எம்.ஆர்.ராதா, சந்திரபாபு, தேங்காய் சீனிவாசன், லூஸ் மோகன், கமல்ஹாசன் வரை பலரும் சென்னையை பாஷையை பேசி, பல திரைப்படங்களில் நடித்துள்ளனர்.
"சினிமாவுக்கு போன சித்தாளு" என்ற பெயரில் ஜெயகாந்தன் எழுதிய நாவலும், சென்னை பாஷைக்கு புகழை தேடி தந்தது. அன்று புழக்கத்தில் இருந்த பல சென்னை வார்த்தைகள், இன்று வழக்கத்தில் இல்லையென்றாலும், சென்னை பாஷையின் அழகு குறையவில்லை.
credit ns7.tv