வியாழன், 22 ஆகஸ்ட், 2019

10 மணி நேரத்தில் டெல்லி டூ மும்பை; ராஜ்தானி ரயிலின் வேகம் அதிகரிப்பு! August 21, 2019


Image
ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரயிலின் வேகத்தை மணிக்கு 160 கிமி ஆக அதிகரிக்க உள்ளதால் பயண நேரம் வெகுவாக குறையவுள்ளது.
டெல்லி, சென்னை, கொல்கத்தா, மும்பை ஆகிய நான்கு பெருநகரங்களை இணைத்து தங்க நாற்கர சாலை வாஜ்பாய் ஆட்சிக்காலத்தில் அமைக்கப்பட்டது. இந்நகரங்களுக்கு இடையிலான ரயில் போக்குவரத்தை மையப்படுத்தி  ‘Mission Raftaar’ என்ற திட்டத்தை 2016-17 ரயில்வே பட்ஜெட்டில் மத்திய அரசு அறிவித்தது.
அடுத்த 5 ஆண்டுகளில் ரயில்களின் சராசரி வேகத்தை இருமடங்காக அதிகரிக்கச் செய்வதே ‘Mission Raftaar’ திட்டத்தின் நோக்கமாகும். ரயில்களின் வேகம் அதிகரிக்கப்படுவது பயண நேரத்தை குறைக்கும் என்பதால் பயணிகள் மற்றும் சரக்கு போக்குவரத்துக்கு விரயமாகும் கால நேரம் வெகுவாக மிச்சப்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் 261 ரயில்களின் வேகத்தை அதிகரிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
இதனிடையே டெல்லி - மும்பை இடையிலான ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரயிலின் வேகத்தை மணிக்கு 130கிமீ-ல் இருந்து 160 ஆக அதிகரிக்கப்போவதாக மேற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இந்த நகரங்களுக்கிடையில் தற்போதைய பயண நேரம் 15.5 மணியாக உள்ளது. வேகம் அதிகரிக்கப்படுவதன் மூலம் இந்த நேரம் 10 மணி நேரமாக குறைக்கப்படுகிறது. மத்திய அரசு இதற்கு ஒப்புதல் அளித்துள்ளதாக கூறப்படுகிறது.
‘Mission Raftaar’ திட்டத்தின் கீழ் டெல்லி - மும்பை, டெல்லி - ஹவுரா, ஹவுரா - சென்னை, சென்னை - மும்பை, டெல்லி - சென்னை மற்றும் ஹவுரா - மும்பை ஆகிய 6 வழித்தடங்களில் இயக்கப்படும் ரயில்களின் வேகம் உயர்த்தப்பட உள்ளது. இந்த வழித்தடங்களில் தான் 58% சரக்கு போக்குவரத்தும், 52% மொத்த போக்குவரத்தும் நடைபெறுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
credit ns7.tv