திங்கள், 19 ஆகஸ்ட், 2019

இமாச்சல பிரதேசத்தில் இடைவிடாது கொட்டி வரும் கனமழை.... பல இடங்களில் வெள்ளப்பெருக்கு... August 19, 2019


Image
இமாச்சல பிரதேசத்தில் இடைவிடாது கொட்டி வரும் கனமழையால் பல இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதுடன், நிலச்சரிவு ஏற்பட்டு போக்குவரத்து முற்றிலும் பாதிப்படைந்துள்ளது.
கடந்த சில தினங்களாக கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா, அசாம் உள்ளிட்ட மாநிலங்களை நிலை குலைய வைத்த மழை, தற்போது, இமாச்சலப் பிரதேசத்தில் கொட்டி தீர்த்து வருகிறது. மண்டி, காங்ரா உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்து வருவதால் அங்குள்ள பெரும்பாலான அணைகள் நிரம்பி வழிகின்றன. பியாஸ் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் மண்டியில் உள்ள தொங்கு பாலம் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டது. குலு மற்றும் மணாலி இடையிலான தேசிய நெடுஞ்சாலையில் நிலச்சரிவால் வாகனங்கள் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இமாச்சலப் பிரதேசத்தில் அடுத்த 24 மணி நேரத்திற்கு கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மலையோரங்கள், ஆற்றங்கரையோரம் வசிக்கும் மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றும் பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மண்டி பகுதியில் மழை நீரில் சிக்கிக் கொண்ட காரை, அப்பகுதி மக்கள் மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
இதேபோன்று, உத்தரகாண்ட் மாநிலத்திலும் கனமழை பெய்து வருவதால், அங்குள்ள ஆறுகளில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. கரையோரங்களில் வசிக்கும் மக்கள், பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டு வருகின்றனர். கனமழை காரணமாக உத்தரகாசி பகுதியில் தாழ்வான பகுதிகளில் உள்ள குடியிருப்புகளை மழை நீர் சூழ்ந்துள்ளதால் மக்களின் இயல்புவாழ்க்கை முடங்கியுள்ளது. மழைநீரில் சிக்கி தவிப்பவர்களை மீட்கும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
பஞ்சாப், பீகார் உள்ளிட்ட மாநிலங்களிலும் கனமழை பெய்து வருகிறது. பஞ்சாபில் உள்ள பாக்ரா அணையின் நீர்மட்டம் தொடர்ந்து அதிகரித்து வருவதால், அணையிலிருந்து அம்மாநில அரசு நீரை திறந்துவிட்டுள்ளது. இதனால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, இமாச்சல பிரதேச மாநிலம் கீலாங் பகுதியில் பனிமழை பெய்து வருவதால் அங்குள்ள சாலைகள் வெள்ளை போர்வை போர்த்தப்பட்டது போன்று காட்சியளிக்கின்றன.
credit ns7.tv