credit ns7.tv
உதகை அருகே பெய்த வரலாறு காணாத மழையால் எமரால்டு பகுதி உருகுலைந்து உள்ளது. இதனால் அந்த பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்து நாசமாகி உள்ளதுடன் பாதிக்கப்பட்ட மக்கள், இன்னும் இயல்பு நிலைக்கு வர முடியாமல் தமிழக அரசின் உதவியை எதிர்பார்த்து தவித்து வருகின்றனர்.
கடந்த 7,8,9 ஆகிய தேதிகளில் நீலகிரி மாவட்டத்தில் வரலாறு காணாத மழை பெய்தது. குறிப்பாக உதகை அருகே உள்ள அவலாஞ்சியில் ஒரே நாளில் 91 செமீ மழை பெய்து அழகிய வனபகுதியை உருகுலைய செய்துள்ளது. அந்த மழையின் தாக்கம் அருகில் உள்ள எமரால்டு பகுதியையும் விட்டு வைக்கவில்லை. 8-ந்தேதி காலை முதல் தொடர்ந்து பெய்த மழையால் எமரால்டு பகுதியில் மழை நீர் பெருக்கெடுத் ஓடியது. இதனால் வீடுகளில் மழை நீர் புகுந்து மக்கள் அச்சத்தில் உறைந்தனர். சுவர்கள் இடிந்து விழுந்தன.
மழை மற்றும் காற்றின் வேகம் தாங்காமல் வீடுகளின் கூரைகளும் தூக்கி எறியபட்டன. வீடுகளின் உள்ளே வைக்கபட்டிருந்த பொருட்கள் அனைத்தும் சேதம் அடைந்துள்ளன. குடியிருப்பு பகுதியில் நிலச்சரிவுகள் ஏற்பட தொடங்கியதை அடுத்து பொதுமக்கள் உயிருக்கு பயந்து அருகில் உள்ள அரசு பள்ளியில் தஞ்சம் அடைந்தனர்.
கூலி தொழில் செய்து வாழ்ந்து வரும் இந்த மக்கள் மழையால் வீடுகள் இடிந்து நாசமானதால் அதில் வசிக்க முடியாமல் சமூதாய கூடத்தில் தஞ்சம் அடைந்துள்ளனர். மேலும் வீடுகளில் குவிந்துள்ள மண்ணை அகற்றும் பணியிலும் அவர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இதில் சில வீடுகள் சீரமைக்க முடியாத அளவில் சேதம் அடைந்துள்ளது. இதனால் கூலி வேலைக்கு செல்லவா? அல்லது வீட்டை சீரமைப்பதா? ஏன்று தெரியாமல் தவித்து வருகின்றனர்.
மழை பெய்து கடும் பாதிப்புகள் ஏற்பட்ட பிறகு தமிழக அரசு நடவடிக்கை எடுப்பதை விட மழைக்கு முன்பே போதிய நடவடிக்கை எடுத்திருந்தால் இது போன்ற பாதிப்புகள் ஏற்படாமல் தடுத்திருக்க முடியும் என அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.