credit ns7.tv
ஆண்டுக்கு 6 லட்சம் வாகனங்கள் வந்து செல்வதால், மலைகளின் இளவரசியான கொடைக்கானலின் சுற்றுச்சூழல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
பச்சை போர்வை போர்த்திய அழகுடன், எண்ணற்ற சுற்றுலா தளங்களை கொண்ட குளிர் பிரதேசம் கொடைக்கானல், 22 சதுர கிலோ மீட்டரில், பல்வேறு இயற்கை எழில் மிக்க கிராமங்களை உள்ளடக்கியது. கொடைக்கானலில் ஐந்தரை கிலோ மீட்டர் தொலைவிற்கு ஏரி அமைந்துள்ளது. கொடைக்கானலுக்கு வருடந்தோறும் 6 லட்சம் வாகனங்கள் வந்து செல்கின்றன. இந்த இயற்கை எழில் கொஞ்சும் பசுமை வனத்திற்கு நடுவே, மூடப்பட்ட பாதரச தெர்மா மீட்டர் தயாரிக்கும் ஆலையின் கழிவுகள், ஆலை வளாகத்தில் புதைக்கப்பட்டுள்ளது.
கண்களுக்கு மட்டும் அல்லாமல் மனதுக்கும் இதம் தரும் இந்த பசுமைக்கு, பாதரச ஆலைக் கழிவு, விதிகள் மீறிய கட்டிடங்கள், சுற்றுலா பயணிகளின் வாகனங்களால ஏற்படும் காற்று மாசு, போன்றவை பாதிப்பை ஏற்படுத்துவதாக உள்ளன. இதிலிருந்து கொடைக்கானலை மீட்டு எடுக்க சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. பாதரச ஆலை வளாகத்தில் 25 ஏக்கர் பரப்பளவில் ஆலை கழிவுகள் புதைக்கப்பட்டதால் கொடைக்கானலில் சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டு நோய்கள் பரவி வருவதாக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
மலைப்பகுதியின் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில், கொடைக்கானலில் பேட்டரி வாகனங்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்க வேண்டும் என்றும் இயற்கை ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர். சுற்றுலாதலமாக மட்டுமின்றி இயற்கையின் அருட்கொடையாகவும் விளங்கும் கொடைக்கானல் மலையை பாதுகாக்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.