வெள்ளி, 23 ஆகஸ்ட், 2019

சிதம்பரத்தை சிக்கவைத்த இந்திராணி முகர்ஜி.... யார் இந்த இந்திராணி முகர்ஜி? August 23, 2019


Image
ஐஎன்எக்ஸ் மீடியா என்ற நிறுவனம் அந்நிய முதலீட்டை முறைகேடாக பெற ப.சிதம்பரம் உதவினார் என்பது தான் தற்போது அவர் மீது வைக்கப்பட்டுள்ள முக்கியக் குற்றச்சாட்டு. 
குவஹாத்தியில் பிரபல தொழிலதிபரின் மகளான இந்திராணி முகர்ஜிதான், இந்த ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனத்தின் முன்னாள் CEO. அவரும் அவருடைய கணவர் பீட்டர் முகர்ஜியும் ஐஎன்எக்ஸ் நிறுவன பங்குகளை வெளிநாட்டு நிறுவனங்களிடம் விற்பது தொடர்பாக கடந்த 2006 ம் ஆண்டு, அப்போதைய நிதியமைச்சர் ப.சிதம்பரத்தை சந்தித்துள்ளனர். அப்போது அவர் வழங்கிய அனுமதியால் ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனத்திற்கு முறைகேடாக வெளிநாட்டு அந்நிய முதலீடு கிடைத்தாக இந்திராணி முகர்ஜி தனது வாக்குமூலத்தில் கூறியிருந்தார். அதாவது 4.62 கோடி ரூபாய் கிடைக்க வேண்டிய இடத்தில் சட்டவிரோதமாக 305 கோடி ரூபாய்  அவர்களுக்கு கிடைத்ததாக தெரிவித்திருந்தார். இந்த வாக்குமூலம் தான் முன்னாள் நிதிஅமைச்சர் ப.சிதம்பரத்தை சிபிஐ வளையத்திற்குள் சிக்க வைத்தது.
ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு விசாரணைக்கு முன்பே, இந்தியாவையே உலுக்கிய ஷீனாபோரா கொலைவழக்கில் 2015ம் ஆண்டு கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தார் இந்த இந்திராணி முகர்ஜி. இந்திராணியின் கணவர் பீட்டர் முகர்ஜி ஏற்கனவே திருமணமானவர். அவருடைய  முதல் மனைவிக்கு பிறந்தவர்  ராகுல் முகர்ஜி. இவரை இந்திராணி முகர்ஜியின் மகளான ஷினாபோரா காதலித்ததாக சொல்லப்பட்டது. இதனால்  இந்திராணி முகர்ஜி பெற்ற மகளையே கொலை செய்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.   இந்த கொலையில் சம்பந்தப்பட்ட இந்திராணி முகர்ஜி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு மும்பையில் உள்ள சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்றது
இந்த தருணத்தில்தான், 2017ம் ஆண்டு ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு பதிவுசெய்யப்பட்டு அந்த வழக்கு தொடர்பான விசாரணையும் இந்திரானி முகர்ஜியிடம் நடத்தப்பட்டது. அப்போது, ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் அப்ரூவராக மாறிய இந்திராணி முகர்ஜி,  சிபிஐ மற்றும் அமலாக்கத்துறையிடம் வாக்குமூலம் அளித்தார். அந்த வாக்குமூலத்தை அடிப்படையாக வைத்து கார்த்திசிதம்பரம் கடந்த ஆண்டு கைது செய்யப்பட்டார். அத்துடன் அதேசமயத்தில் இதுதொடர்பாக ப.சிதம்பரத்திடமும் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது இந்திராணி முகர்ஜி கொடுத்த வாக்குமூலம் தான் 4 முறை நிதி அமைச்சராக இருந்த ப.சிதம்பரத்தை சிறைவாசலின் விளிம்புக்கு அழைத்துசென்றிருக்கிறது. 
credit ns7.tv